இலங்கை
அரசியலமைப்பின் விளைவு: சர்வாதிகாரமே உருவாக்கம்!

அரசியலமைப்பின் விளைவு: சர்வாதிகாரமே உருவாக்கம்!
சுட்டிக்காட்டுகிறார் கர்தினால்
நாட்டில் தற்போதுள்ள அரசியலமைப்பால் சர்வாதிகார வெறியே தோற்றம் பெற்றுள்ளது என்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பு அனைத்துப் புனிதர்கள் தேவாலயத்தில் நேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன. இந்த வழிபாடுகளைத் தலைமையேற்று நடத்திய பின்னர் அங்கு உரையாற்றும்போதே, பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
அரசியலமைப்பு எனப்படும் சர்வாதிகார அமைப்புக்கு வழிவகுத்த சட்டக் கட்டமைப்பால் ஆட்சியாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளனர். இதன் விளைவாக இனங்களுக்கு இடையே இலகுவாகத் தீர்க்கப்பட வேண்டிய கருத்து முரண்பாடுகள் போராக மாற்றப்பட்டு நாட்டில் ஒரு பயங்கரவாத நிலைமை உருவாக்கப்பட்டது.
1990ஆம் ஆண்டுகளில் இருந்து ஊடக ஒடுக்குமுறை, ஊடகவியலாளர்களை காணாமலாக்குதல், படுகொலை செய்தல், வெள்ளைவான் கலாசாரம் போன்ற விடயங்கள் ஆட்சியாளர்களால் மிகவும் மோசமான வகையில் முன்னெடுக்கப்பட்டன. பேரழிவுகரமான போரால் தாயகம் ஆழமான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தது. கடந்த இரண்டு தசாப்தங்களில் இந்தப் போக்கு மேலும் தீவிரமடைந்துள்ளது – என்றார்.