இலங்கை
இலங்கைக்கு இன்னும் முழுச்சுதந்திரம் இல்லை; ஒப்புக்கொள்கின்றார் அநுர!

இலங்கைக்கு இன்னும் முழுச்சுதந்திரம் இல்லை; ஒப்புக்கொள்கின்றார் அநுர!
பொருளாதார, சமூக, கலாசார சுதந்திரத்தை முழுமையாகப் பெற்றுக்கொள்வதற்காக சுதந்திரதினப் போராட்டத்தை தற்போதும் நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது என்று ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய சுதந்திரதின விழா சுதந்திர சதுக்கத்தில் நேற்று இடம்பெற்றது. நிகழ்வில் உரையாற்றும்போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
பொருளாதார, சமூக, கலாசார சுதந்திரத்தை முழுமையாகப் பெற்றுக்கொள்ள ஒரே போர்க்களத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். தாய் நாட்டுக்காக நாம் அனைவரும் ஒற்றுமையாக சுதந்திரப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.
இன்று நாட்டு மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக, இந்த சுதந்திர சதுக்கத்தில் பெருமைமிக்க தேசியக் கொடியின் முன், சுதந்திரத்தின் எதிர்கால எதிர்பார்ப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வரலாற்றுச் சுமையைத் ஏற்றுக்கொண்ட உங்கள் சகோதரனாக நான் நிற்கிறேன்.
என்னைப் போன்றே இந்த சுமையை தாங்கிக்கொண்டு இந்த நேரத்தில் நீங்களும் என்னுடனும் என்னைச் சுற்றியும் நிற்கிறீர்கள் என்று நம்புகிறேன். எமது பொருளாதார, சமூக, கலாசார சுதந்திரத்துக்காக அதாவது நவீன பிரஜைகளாக இந்த நாட்டில் பெருமையுடன் வாழத் தேவையான சுதந்திரத்தை உருவாக்குவதற்காக நாம் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.
நீண்ட காலமாக காலனித்துவத்துக்கு அடிபணிந்தவர்களாக எம்மை பிரித்து ஆண்ட இன, மத, ஜாதி வேறுபாடுகளை அகற்றி இந்த சமூகத்தைத் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். நீங்கள் அனைவரும் நாட்டிற்கான முழுமையான பொருளாதார, சமூக மற்றும் கலாசார சுதந்திரத்தை வென்றெடுக்கும் போர்க்களத்தின் போராட்டக்காரர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் – என்றார்.