தொழில்நுட்பம்
மாசு இல்லா ஹைட்ரஜன் எரிபொருள் வாகனத்தை வடிவமைத்த கோவை மாணவர்கள்; கத்தார் மாரத்தானில் பங்கேற்பு

மாசு இல்லா ஹைட்ரஜன் எரிபொருள் வாகனத்தை வடிவமைத்த கோவை மாணவர்கள்; கத்தார் மாரத்தானில் பங்கேற்பு
உலக வெப்பமயமாதல் தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்கும் வகையில் கோவை மாணவர்கள் ஹைட்ரஜன் எரிபொருள் வாகனம் வடிவமைத்துள்ளனர். இதனை சர்வதேச அளவில் கத்தாரில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் காட்சிப்படுத்த உள்ளனர்.கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில் மாணவர்கள் ஹைட்ரஜன் கொண்டு சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் உருவாக்கிய வாகனத்தை கத்தார் நாட்டில் நடைபெறும் ஷெல் சுற்றுச்சூழல் மாரத்தான் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து கல்லூரி மாணவர் பிரதிஷ் கூறும் போது, “ஒரு வாகனத்தை வடிவமைத்து உள்ளோம். அதை ஷெல் எக்கோ மாரத்தான் (shell eco marathon) நிகழ்வுக்கு எடுத்துச் செல்ல உள்ளோம். இதனை சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனமாக இருக்கும் வகையில் வடிவமைத்து இருக்கிறோம். ஹைட்ரஜன் ப்யூயல் செல் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பயன்படுத்தும் போது இது எந்த விதமான மாசும் ஏற்படுத்தாது. இந்தியாவில் தற்போது பசுமை ஹைட்ரஜனில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இன்றைய வாழ்க்கையில் அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து ஆராய்ந்து காற்று மாசு ஏற்படுத்தாதவாறு வாகனங்களில் அதை எவ்வாறு கொண்டு வருவது என கண்டுபிடித்து வாகனத்தை வடிவமைத்து இருக்கிறோம். பெட்ரோல் வாகனங்களை எடுத்துக் கொள்ளும் போது ஒரு கிலோ மீட்டருக்கு நான்கு ரூபாய் செலவாகும். எலக்ட்ரிக் வாகனங்களை எடுத்துக் கொண்டால் ஒரு கிலோ மீட்டருக்கு இரண்டு ரூபாய் செலவாகும். நாங்கள் கண்டுபிடித்து இருக்கும் ஹைட்ரஜன் வாகனம் ஒரு கிலோ மீட்டருக்கு வெறும் 50 பைசா மட்டுமே எடுத்துக் கொள்ளும். இதுபோன்று செலவு குறைவாக கொடுக்கும் எரிபொருள் இருக்கும் போது ஏன்? மற்றவைகளை பயன்படுத்த வேண்டும். இந்த ஹைட்ரஜன் எரிபொருள் சுற்றுச் சூழலுக்கு உகந்ததாகவும் உள்ளது. அதே போல விலையும் குறைவான விதத்தில் கிடைக்கிறது, அதனால் இது போன்ற ஒரு பவர்ஃபுல்லான வாகனத்தை உருவாக்க முடிகிறது.இது போன்ற வாகனத்தை பயன்படுத்துவதால் இந்தியாவிற்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அரசாங்கம் இதற்கு நிதி உதவி வழங்கி ஊக்குவித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அரசாங்கம் நினைத்தால் இதை நிறைய மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும். அரசாங்கம் உதவி செய்யும் போது அதை உலக நாடுகளுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்” என்று தெரிவித்து உள்ளார்.இதுகுறித்து பேசிய மாணவி ஹரிணி கூறியதாவது, “ஹைட்ரஜன் எரிபொருள் பயன்பாட்டால் எந்தவித சுற்றுச்சூழல் தீங்கும் இல்லை, ஆனால் பெட்ரோல் டீசல் பயன்பாட்டால் மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எலக்ட்ரிக்கல் வாகனங்கள் கூட மாசு ஏற்படுத்தாது என்று கூறினாலும், அதற்கு பயன்படுத்தப்படும் பேட்டரிகள் மறுசுழற்சி செய்யப்படும் போது கார்பன் மாசு ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக தான் இந்த ஹைட்ரஜன் எரிபொருள் இருக்கிறது. பெட்ரோல் டீசல் எரிபொருளின் விலையை காட்டிலும் ஹைட்ரஜனின் எரிபொருள்கள் குறைவாக இருக்கும். ஹைட்ரஜன் எரிபொருளை நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்துவதற்கு ஆராய்ச்சிகள் சென்று கொண்டு இருக்கிறது,” என்று தெரிவித்து உள்ளார்.தற்பொழுது இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வரும் பொதுமக்கள் பயன்படுத்த தற்பொழுது ஒருவர் மட்டும் பயணம் செய்யும் வாகனத்தை உருவாக்கி உள்ளோம். இந்த தொழில் நுட்பத்தைக் கொண்டு அனைவரும் பயணம் செய்யும் அனைத்து வாகனங்களையும் உருவாக்க வேண்டும். ஹைட்ரஜன் கொண்டு குறைந்த செலவில் சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் உருவாக்கிய இந்த தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த வகையான வாகனத்தை அரசு இந்தியாவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் அனைத்து மக்களும் பயனடைவதுடன், சுற்றுச்சூழலும் பேணி காக்கப்படும் என மாணவர்கள் தெரிவித்தனர்.உலகம் எதிர்கொண்டு இருக்கும் பெரும் சவால்களில் ஒன்று உலக வெப்பமயமாதல். வாகனங்கள் இயக்கம் போது வெளிப்படும் புகை இதற்கு முக்கிய காரணமாக அமைகின்றன. உலக சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் வாகனங்களை இயக்க பல்வேறு ஆராய்சிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கோவையில் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரி மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனத்தை வடிவமைத்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.பி.ரஹ்மான், கோவை மாவட்டம்