இந்தியா
அமெரிக்கா சென்றடைந்தார் இந்திய பிரதமர்!

அமெரிக்கா சென்றடைந்தார் இந்திய பிரதமர்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரான்ஸ், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த 10-ம் திகதி பிரான்ஸ் சென்ற இந்திய பிரதமர் மோடி தலைநகர் பாரிசில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் பங்கேற்றார்.
இதையடுத்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இதற்கிடையே, பிரான்ஸ் பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டார்.
பிரான்சின் மெர்சிலி நகரில் இருந்து விமானம் மூலம் இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். விமான நிலையம் சென்ற பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்தார்.
தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்ட இந்திய பிரதமர் மோடி இந்திய நேரப்படி இன்று அதிகாலை வொஷிங்டன் டிசி நகருக்கு சென்றடைந்தார்.
மோடிக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்திய வம்சாவளியினர் அவரை வரவேற்க திரண்டதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய பிரதமர் மோடி, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை சந்திக்கிறார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றபின் முதல் முறையாக அவரை இந்திய பிரதமர் மோடி சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.