Connect with us

பொழுதுபோக்கு

சம்பந்தமில்லாத கேள்விகள் கேட்ட எதிர் தரப்பு வழக்கறிஞர்… கோர்ட்டில் இளையராஜா அளித்த பதில்

Published

on

saravanan ilaiyaraja

Loading

சம்பந்தமில்லாத கேள்விகள் கேட்ட எதிர் தரப்பு வழக்கறிஞர்… கோர்ட்டில் இளையராஜா அளித்த பதில்

தேவர்மகன், குணா உள்ளிட்ட 109 படங்களின் பாடல்கள் உரிமம் தொடர்பான வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா வியாழக்கிழமை நேரில் ஆஜர் ஆகி 1 மணி நேரத்துக்கும் மேலாக சாட்சியம் அளித்தார்.மியூசிக் மாஸ்டர் என்ற இசை நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அதில் 1997-ம் ஆண்டு இளையராஜா அவரது மனைவி பெயரில் இசை நிறுவனத்திற்கு ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும் அந்த ஒப்பந்தத்தின்படி தேவர்மகன், பாண்டியன், பிரம்மா, குணா உள்ளிட்ட 109 படங்களின் இசை வெளியீட்டு உரிமையை தனது நிறுவனம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கில் எதிர்தரப்பாக இளையராஜா, அவருடைய இசை நிறுவனம் சேர்க்கப்பட்டது. இந்த வழக்கில்  இளையராஜா நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது, இளையராஜாவிடம் மூத்த வழக்கறிஞர் பி.ஆர். ராமன் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். அவரிடம் பாடல்களின் பதிப்புரிமை, தயாரிப்பாளரிடம் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டது. மேலும், அவருடைய சொத்து மதிப்புகள் தொடர்பாகவும் கேள்விகள் கேட்கப்பட்டன. குறுக்கு விசாரணையின் போது, ‘‘கார், பங்களா போன்றவற்றை எந்த ஆண்டு வாங்கினீர்கள்? குறிப்பாக, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பீச் ரிசார்ட் எப்போது வாங்கினீர்கள்?’’ என்று கேட்டதற்கு, வழக்குக்கு தொடர்பு இல்லாத கேள்விகள் கேட்கப்படுவதாக கூறி இளையராஜாவின் வழக்கறிஞர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.பிறகு, இளையராஜா இசையமைத்த திரைப்பட பாடல்களின் உரிமை, இதற்காக தயாரிப்பாளர்களிடம் வாங்கிய தொகை, இளையராஜாவின் தற்போதைய சொத்து மதிப்பு, அவரது மனைவி்யின் சொத்துகள் குறித்து வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் கேள்வி எழுப்பினார்.அதற்கு இளையராஜா, ‘‘இசையமைப்பது மட்டுமே எனது தொழில். இசை மீதான ஆர்வத்தால், ஆடம்பர வாழ்க்கையில் எனக்கு நாட்டம் இருந்தது இல்லை. அதனால், எந்த பொருட்களை எப்போது வாங்கினேன் என்பது தெரியாது. திரைப்படங்களில் இசையமைக்கும்போது, இயக்குநர்களுடன் மட்டுமே உரையாடல்கள் இருக்கும். தயாரிப்பாளர்களுடன் எந்த சம்பந்தமும் இருந்தது இல்லை. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் நான் தலையிடுவது இல்லை. எனக்கு சொந்தமாக அலுவலகம், ஸ்டுடியோகூட இல்லை. பெயர், புகழ், செல்வம் என அனைத்தும் சினிமா தந்தது’’ என்று தெரிவித்தார்.இந்த வழக்கு விசாரணை குறித்து இசைஞானி இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “இசைஞானி இளையராஜாவின் பாடல்களை இண்டர்நெட்டிலோ மற்ற இடங்களிலோ கொடுக்கக் கூடாது என்று கூறி இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்கள். நடுவில் நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதற்கு பிறகு, இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்றைக்கு இசைஞானி இளையராஜா அவருடைய தரப்பு சாட்சியைத்தைக் கூறினார். சாட்சியம் சொன்ன பிறகு, அவர் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார். அந்த குறுக்கு விசாரணையில், அவர் முக்கியமாக என்ன சொன்னார்கள் என்றால், அவருடைய பாடல்கள், அவர் இயற்றியிருக்கக்கூடிய பாடல்களின் காப்புரிமை அவரிடம்தான் இருக்கிறது. எந்த தயாரிப்பாளரிடமும் அவருடைய பாடல்களின் காப்புரிமையை அவர் கொடுக்கவில்லை. அதற்கு அவர்கள் எந்தவிதமான ஒப்பந்தத்தையும் தாக்கல் செய்யவில்லை. அதனால், அந்த பாடல்களின் காப்புரிமை இசைஞானி இளையராஜாவிடம் தான் இருக்கிறது. இயக்குநர்கள் ஏதாவது பணம் கொடுத்திருந்தால், இந்த பாடலை பயன்படுத்திக்கொள்ளக்கூடிய லைசென்ஸி, அந்த அடிப்படையில் சொல்லியிருக்கிறார்கள். முக்கியமாக, எந்த கருத்தை முன்வைத்திருக்கிறார் என்றால், 1990-களில் இண்டர்நெட் கிடையாது. யூடியூப் கிடையாது. அப்போது, இந்த படத்தினுடைய இசையை வாங்கியிருக்கிறார்கள். அப்போது, ஆடியோ கேசட் ரிலீஸ் செய்வதற்குதான் இந்த உரிமைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்போது இந்த உரிமைகள் எதுவும் இல்லை. இல்லாத, உரிமைகளை வைத்துக்கொண்டு, நாங்கள் அந்த பாடல்களை இண்டர்நெட்டில் கொடுப்போம். இசைஞானி இந்த பாடல்களை  பாடக்கூடாது, கொடுக்கக்கூடாது என்று வழக்கு போட்டிருந்தார்கள். அந்த வழக்கினுடைய விசாரணைதான் போய்க்கொண்டிருந்தது. விசாரணையின்போது தேவையற்ற பல கேள்விகளை கேட்டார்கள். இந்த கேள்விகள் தேவையற்ற கேள்விகள் என்று ஆட்சேபனை தெரிவித்தோம். அதை நீதிமன்றம் இந்த கேள்விகள் எல்லாம் தேவையற்ற கேள்விகள் என்று பதிவு செய்தது. இசைஞானி இளையராஜா இந்த பாடல்களுகுக்கு காப்புரிமை இருக்கிறது, இண்டர்நெட்டில் வெளியிடக் கூடாது. ரிங்டோனாக பயன்படுத்தக்கூடாது என்று வழக்கு போட்டிருந்தார். இதுதான், இந்த வழக்கின் முக்கியமான ஒன்று. இந்த வழக்கின் அடுத்த கட்டம், எங்கள் சார்பில் மேலும் கூடுதலான ஆதாரங்களைத் தாக்கல் செய்யப்போகிறோம். வழக்கு நீதிமன்றத்திற்கு வரும். நம்முடைய காப்புரிமை சட்டம், இசை படைப்புகளுக்கு உரிமையாளர் இசையமைப்பாளர்தான் என்று தெளிவாகக் கூறுகிறது. இப்போது அவர்கள் 2-வது 3-வது நபரிடம் வாங்கிய காபிரைட்டை வைத்துக்கொண்டு அவர்கள்தான் உன்மையான உரிமையாளர்கள் என்று சொல்லி சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள். இசைஞானி இளையராஜா அவருடைய தளத்தில் வெளியிட்டால்கூட, அதற்கு ஆட்செபனை தெரிவிக்கிறார்கள். இது எல்லாத்துக்குமே, ஒரு தீர்வு போல, இவற்றை தீர்க்க வேண்டும் என்பதற்காக இந்த வழக்கை தொடர்ந்திருக்கிறோம்” என்று கூறினார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன