விளையாட்டு
AFG vs SA Live Score: வெற்றியுடன் தொடங்கப் போவது யார்? ஆப்கான் – தெ.ஆ., அணிகள் இன்று மோதல்

AFG vs SA Live Score: வெற்றியுடன் தொடங்கப் போவது யார்? ஆப்கான் – தெ.ஆ., அணிகள் இன்று மோதல்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்கள்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் நேற்று முன்தினம் புதன்கிழமை (பிப்.19) முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. ஐ.சி.சி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் 2023 முடிவுகள் அடிப்படையில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்தத் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் படிக்கவும்: Afghanistan vs South Africa LIVE Cricket Score, Champions Trophy 2025முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெறாத நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். சாம்பியன்ஸ் டிராபியில் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதிக்குள் நுழையும் வாய்ப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். அதனால், ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடும். இந்நிலையில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று முன்தினம் கராச்சியில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. நேற்று வியாழக்கிழமை துபாயில் நடந்த ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல் இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு கராச்சியில் தொடங்கி நடைபெறும் 3-வது போட்டியில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. அண்மையில் நடந்த முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிராக 300 ரன்களுக்கு மேல் குவித்தும் அவ்விரு ஆட்டங்களில் தோல்வியை தழுவிய தென் ஆப்பிரிக்க அணி எழுச்சி பெற வேண்டிய சூழலில் இருக்கிறது.தென்ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் கோப்பையை வென்று 27 ஆண்டுகள் ஆகி விட்டது. 1998-ம் ஆண்டு முதலாவது சாம்பியன்ஸ் கோப்பையை வசப்படுத்திய அந்த அணி நீண்ட கால ஏக்கத்தை தணிக்க வேண்டும் என்றால் முதலில் இன்றைய ஆட்டத்தை வெற்றியோடு தொடங்க வேண்டும். பந்துவீச்சில் ககிசோ ரபடா, யான்சென், கேஷவ் மகராஜ் மிரட்டினால் தென் ஆப்பிரிக்காவின் கை ஓங்கும்.சாம்பியன்ஸ் கோப்பையில் அறிமுக அணியாக அடியெடுத்து வைக்கும் ஆப்கானிஸ்தான் அணி ரஷித்கான், முகமது நபி, நங்கேயலியா கரோட், நூர் அகமது ஆகிய சுழற்பந்து வீச்சை தான் அதிகம் சார்ந்து இருக்கிறது. பேட்டிங்கில் குர்பாஸ், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், இப்ராகிம் ஜட்ரன், குல்படின் நம்பிக்கை அளிக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் அணி கடந்த செப்டம்பரில் சார்ஜாவில் நடந்த ஒரு நாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்தது. அதே போல் அதிர்ச்சி அளிக்கும் உத்வேகத்துடன் வரிந்து கட்டுவார்கள் என்பதால், இந்த போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.