இலங்கை
செம்மணிப் புதைகுழிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்!

செம்மணிப் புதைகுழிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்!
மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ள அரியாலை – செம்மணிப் புதைகுழியில் பொலிஸார், மற்றும் சம்பந்தப்பட்ட மயானத்தின் (சிந்துபாத்தி) அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்கள் இணைந்த கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என சட்டத்தரணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளருமான க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இந்த மனிதப் புதைகுழி தொடர்பான கலந்தாய்வு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் நேற்றுமாலை நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வில், முறைப்பாட்டாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷூம், காணாமலாக்கப்பட்டோரது சங்கத்தின் சார்பில் சட்டத்தரணி தற்பரனும் முன்னிலையாகியிருந்தனர்.
இதன்போதே, என்புத் தொகுதிகள் மீட்கப்பட்ட பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பும், அதற்கு மேலதிகமாக சம்பந்தப்பட்ட மயானத்தின் அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கை நீதிவானால் ஏற்கப்பட்டதுடன், சிந்துப்பாத்தி இந்து மயானத்தின் அபிவிருத்தி சங்கத்தின் ஐந்து உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.