இலங்கை
ஆபிரிக்கப் பன்றிக்காய்ச்சல் வடக்கில் தீவிரமாகப் பரவல்! முடக்கப்பட்டன ஐந்து பண்ணைகள்

ஆபிரிக்கப் பன்றிக்காய்ச்சல் வடக்கில் தீவிரமாகப் பரவல்! முடக்கப்பட்டன ஐந்து பண்ணைகள்
வடமாகாணத்தில் ஆபிரிக்கப் பன்றிக் காய்ச்சல் தீவிரமாகப் பரவியுள்ளது. இந்தத் தொற்றுக்கு உட்பட்டு 800 பன்றிகள் உயிரிழந்த நிலையில், ஐந்து பண்ணைகள் மூடப்பட்டுள்ளன என்று வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் மருத்துவர் சிவகுருநாதன் வசீகரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயக் குழுக்கூட்டத்தில், ஆபிரிக்கப் பன்றிக் காய்ச்சல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, அது தொடர்பில் தொடர்புகொண்டு கேட்டபோது மருத்துவர் சிவகுருநாதன் வசீகரன் மேலும் தெரிவித்ததாவது:
ஆபிரிக்கப் பன்றிக் காய்ச்சலானது பன்றிகள் மூலம் பன்றிகளுக்குப் பரவும் தன்மை வாய்ந்தது. வடக்கில் பல இடங்களில் இந்த வைரஸ்தொற்று பரவலாக அவதானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் 50 பன்றிகள் இறந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இரண்டு பண்ணைகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளியில் உள்ள பன்றி வளர்ப்புப் பண்ணையில் 40 பன்றிகள் இறந்த நிலையில் அந்தப் பண்ணையும் முடக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் 700 பன்றிகள் இறந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இரண்டு பண்ணைகள் முடக்கப்பட்டுள்ளன. மன்னார் உள்ளிட்ட இன்னும் பல பகுதிகளிலும் பன்றிகள் உயிரிழந்த நிலையில், அவற்றின் குருதி மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
ஆபிரிக்கப் பன்றிக்காய்ச்சலானது மனிதரில் நோயை ஏற்படுத்தாத போதும், பன்றிகளில் மிக வேகமாகப் பரவி அவற்றில் பலத்த உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய நோயாகும். நோயுற்ற பன்றிகளின் நேரடி தொடுகை மூலமாக மட்டுமன்றி மனித உடல், உடை மற்றும் வாகனங்கள் ஊடாகவும் வேறு பண்ணைகளில் நோய் பரவும் வாய்ப்புகள் அதிகம். ஆதலால், ஆபிரிக்கப் பன்றிக் காய்ச்சலின் பரவுகையை தடுத்துநிறுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன – என்றார்.