இலங்கை
முதல்வர் அல்லது தவிசாளர் யார் என்பதை கட்சி தீர்மானம் எடுத்துள்ளது – சுமந்திரன் தெரிவிப்பு!..

முதல்வர் அல்லது தவிசாளர் யார் என்பதை கட்சி தீர்மானம் எடுத்துள்ளது – சுமந்திரன் தெரிவிப்பு!..
உள்ளூராட்சி சபைகளின் முதல்வர் அல்லது தவிசாளர் யார் என்பதை தேர்தலின் போது அறிவிப்பதில்லை என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானம் எடுத்துள்ளது.
தேர்தல் முடிந்த பின்னரே யார் என்பது அறிவிக்கப்படும். அதிலும் அனேகமாக பல புதியவர்கள் இம்முறை நியமிக்கப்படுவார்கள்.
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு யாழ் தேர்தல் திணைக்களத்தில் இன்றையதினம் கட்டுப் பணத்தை செலுத்தியது.
இக் கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்திருந்தார். இதன் போது மேலும் தெரிவித்ததாவது..
யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களிலில் தமிழரசுக்கட்சி வேட்புமனுத் தாக்கலை செய்வதற்கான கட்டுப்பணத்தை இன்றைக்கு செலுத்தியுள்ளோம்.இந்த மாவட்டத்தில் உள்ள 17 சபைகளிலும் போட்டியிடுவதற்கு கட்டுப்பணத்தை செலுத்தியதுடன் வேட்புமனு படிவங்களையும் பெற்றுக் கொண்டு செல்கிறோம்.
இந்த 17 சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி இந்த முறை நிர்வாகத்தை அமைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம். இந்த தடவை தேர்தலின் போது தவிசாளர் அல்லது முதல்வர் யார் என அறிவிப்பதில்லை என்று கட்சியின் மத்திய செயற் குழு தீர்மானித்திருக்கிறது. ஆகையினால் தேர்தலுக்கு பின்னர் தான் அது யார் என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும். அனேகமாக பல புதியவர்கள் கட்டாயம் நியமிக்கப்படுவார்கள்.
தமிழரசுக் கட்சிக்கு அதிகமான வேட்பாளர்கள் இருக்கிறார்கள். அவ்வாறு அதிகமானவர்கள் இருப்பதால் யாரை நிறுத்துவது என்பதில் இழுபறி கொஞ்சம் இருக்கிறது. அது வழமையாக எங்களுக்கு இருக்கிற ஒரு பிரச்சனை தான்.முதன்மையாக இருக்கிற கட்சிகளில் போட்டியிடுவதற்கு பலர் ஆர்வம் காட்டுவார்கள்.
இதனால் எமக்கு இழுபறி வந்தாலும் அதனை நாங்கள் சுமூகமாகத் தீர்த்துக் கொண்டு யார் யார் வேட்பாளர்கள் என்பதை தீர்மானிப்போம் என்றார். (ப)