இலங்கை
மீனவர்களால் நிராகரிக்கப்பட்ட கடற்றொழில் சட்டம்!

மீனவர்களால் நிராகரிக்கப்பட்ட கடற்றொழில் சட்டம்!
தற்போதைய கடற்றொழில் அமைச்சால் கொண்டுவரப்பட இருப்பதாக தெரிவிக்கப்படும் மீன்பிடி சட்டம் மீனவர் சமூகத்தால் எப்போதோ நிராகரிக்கப்பட்டதாகும். அதனையே மீண்டும் மீன்பிடி அமைச்சு கொண்டுவர முயற்சிப்பதாகவும் வடக்கு மாகாண மீனவ அமைப்பின் பிரதிநிதி வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் வடமராட்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர்;
தடை செய்யப்பட்டதாக அறிவக்கப்பட்டுள்ள 16 மீன்பிடி தொழில்களையும் உடனடியாக தடை செய்ய வேண்டும். தமிழ் மக்கள் தமிழ் மக்களுக்கே வாக்களிக்க வேண்டும். ஏனெனில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு உறுதியளித்தது போன்று எதனையும் செய்யவில்லை. இதனாலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நிராகரிக்க வேண்டும்.
அட்டைப் பண்ணை பிரச்சினை உட்பட மீனவர்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகள் குறித்தும் தற்போதைய ஆளுநருடன் கதைத்தோம். இதன்போது கடற்றொழில் அமைச்சருடன் கதைத்து விட்டு ஒரு மாதத்திற்குள் தீர்வு தருவதாக ஆளுநர் கூறினார். இன்றுவரை அதற்கு எந்தவிதமான பதிலும் வழங்கவில்லை. எல்லோரும் எங்களை அழைத்து கதைக்கின்றார்கள் ஆனால் பதில் எதுவும் வழங்காமல் கலைப்பதுடனேயே நிறுத்தி விடுகின்றார்கள்.
பின்னர் மீண்டும் ஆளுநர் உட்பட அதிகாரிகள் இணைந்து கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு கதைத்துள்ளார்கள். மீனவ அமைப்புக்களுடன் கதைக்காமல் இந்த செயற்பாட்டை செய்கின்றனர். கடல் அட்டை பண்ணையை கொடுப்பதற்கு நீங்கள் யார்?
குறித்த கடற்பகுதி அமைந்துள்ள கடற்தொழில் சங்கம் முதலில் அனுமதிக்க வேண்டும். பின்னர் அந்தப் பகுதியை ஆய்வு செய்ய வேண்டும். அந்த இடத்தில் அட்டைப் பண்ணை அமைக்க முடியுமா முடியாதா என்று பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு நீங்கள் சிறு தொழிலாளி ஒருவனை அழைத்துச் சென்று அறைக்குள் வைத்து மிரட்டி, அடித்து, காசு தருவதாக கூறி நீங்கள் இலஞ்சங்களை வேண்டி உங்களது பொக்கட்களை நிரப்பி நீங்கள் எதுவும் செய்ய தேவையில்லை.
ஒரு அதிகாரி கூறினார் நாங்கள் அனுமதி கொடுத்தால் நீங்களும் அனுமதி கொடுக்கத் தான் வேண்டுமென்று. ஏனென்றால் அவர் இலஞ்சம் வேண்டும் புலி. அவர் இலஞ்சத்திலேயே பிறந்து, இலஞ்சத்திலேயே வளர்ந்து, இலஞ்சத்திலேயே மூழ்கியுள்ளார். அப்படியாயின் நீங்கள் அதை சொல்வீர்கள் தானே. தேவையில்லாத வேலைகள் பார்க்காதீர்கள். கடற்தொழில் அமைப்புகளுடன் கலந்துரையாடிய பின்னர் முடிவுகளை எடுங்கள்-என்றார்.