வணிகம்
சுயதொழில் தொடங்க விரும்பும் பெண்ணா நீங்கள்? ரூ. 1.25 லட்சம் வரை கடன்; இந்த திட்டம் உங்களுக்கானது!

சுயதொழில் தொடங்க விரும்பும் பெண்ணா நீங்கள்? ரூ. 1.25 லட்சம் வரை கடன்; இந்த திட்டம் உங்களுக்கானது!
தற்போதைய சூழலில் பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பதை விட, சுய தொழில் தொடங்க வேண்டும் என்று விருப்பப்படுகின்றனர். இதற்காக பெண்களுக்கு உதவி செய்யும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பிரத்தியேகமான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன.அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு சார்பில் எளிமையான ஒரு திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, புதிய குழுக்கடன் வழங்குவதற்கான திட்டத்தை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேபாட்டுக் கழகம் செயல்படுத்தியுள்ளது. இந்தக் குழுக்கடன்கள், சுய உதவிக் குழு சார்பாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் ஒரு நபருக்கு தலா, ரூ. 1.25 லட்சம் கடனாக வழங்கப்படும். இந்த கடனுக்கு 6 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்தக் கடன் தொகை இரண்டரை ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை பெறுவதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் ஆகும். சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் நபர்களுக்கு மட்டுமே தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக இந்தக் கடன் வழங்கப்படும். அதிலும், சம்பந்தப்பட்ட சுய உதவிக் குழு தொடங்கி 6 மாதங்களை கட்டாயமாக பூர்த்தி செய்திருக்க வேண்டும். இந்தக் குழுவில் அதிகபட்சமாக 20 உறுப்பினர்கள் வரை இருக்கலாம்.கடன் பெற விரும்பும் நபரின் வயது 18 முதல் 60 வரை இருத்தல் அவசியம், மேலும், அவர்களது ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு அதிகமாக இருக்கக் கூடாது. இந்த திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் குடும்பத்தில் உள்ள ஒருவர் மட்டுமே கடன் பெற முடியும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், www.tabcedco.tn.gov.in இணையதளத்தில் ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, பிறப்பிடச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர சிறுபான்மையினர் நல அலுவலர் மற்றும் அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.