வணிகம்
‘கார்ப்பரேட் செக்டார் தான் அரசை இயக்குகிறது’: கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் குற்றச்சாட்டு

‘கார்ப்பரேட் செக்டார் தான் அரசை இயக்குகிறது’: கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் குற்றச்சாட்டு
தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசியது பின்வருமாறு:- எங்களது நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. கடந்த 2022, 2023, 2024 ஆம் ஆண்டுகளில் இருந்து ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தி வரும் மின் கட்டணம் மற்றும் இதர துணை கட்டணங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் அது ரத்து செய்யப்பட்டவில்லை. தொடர்ச்சியாக 2025 ஆம் ஆண்டான இந்த வருடமும் மின் கட்டணத்தை உயர்த்தி விடக்கூடாது. 12kw மின் நுகர்வோர்களுக்கு 3B யில் இருந்து 3A மாற்ற சட்டசபையில் அறிவித்தும் அரசாணை வெளியீட்டும் அதனை நடைமுறைப்படுத்தாமல் உள்ளது. தமிழக அரசு உடனடியாக அதனை நடவடிக்கையில் எடுத்திட வேண்டும். நிலை கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், தொழிற்சாலை கூரையின் மீது அமைக்கப்பட்ட சூரிய ஒளி மின் தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு நெட்வொர்க் கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். வெல்டிங் தொழிலுக்கு விதிக்கப்படும் 15% கூடுதல் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்களின் உடல் நலன் மற்றும் தொழில்துறை நலன் கருதி மதுக்கடைகளை பகல் நேரத்தில் திறப்பதை தவிர்த்து மாலை நேரங்களில் கடைகளை திறக்க அரசு ஆவணம் செய்ய வேண்டும்.சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும். அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் வணிக வளாகம் அமைத்திட வேண்டும். ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பாதிக்காத வண்ணம் அமைத்திட வேண்டும். QOC BIS சட்டங்களை ரத்து செய்திட மத்திய அரசிடம் சிறப்பு கவன தீர்மானம் இயற்றி வலியுறுத்த வேண்டும். எங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பின் சார்பில் நவம்பர் 9 ஆம் தேதி கோவையில் மாநில மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் தொழில்துறை மட்டும் அல்லாமல் அனைத்து சங்கங்கள் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்க இருக்கிறோம்.தற்போதைய தமிழக பட்ஜெட் தேர்தல் அறிக்கை போன்று இருக்கிறது. கொரோனாவிற்கு பின்பு பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது. அதற்கு கடன்கள் மற்றும் மின்சார கட்டண உயர்வு தான் காரணம். 2026 ஆம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பில் என்ன அறிவிப்பார்களோ என்ற பயமும் இருக்கிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்கள் போட்டி மாநிலங்களாக இருக்கின்ற பட்சத்தில், அங்கு தரக்கூடிய மானியங்களுக்கு இணையாக எதுவும் இங்கு அறிவிக்கப்படவில்லை. அதே சமயம், அறிவிப்பை வெளியிட்டாலும் அதற்கான நிதி எங்கிருக்கிறது? என தெரியவில்லை. மத்திய – மாநில அரசுகள் பட்ஜெட் அறிவிப்பிற்கு சில தொழில்துறையினர் நன்றி தெரிவிப்பது என்பது மரபு. அதற்காக தேனாறும் பாலாறும் ஓடியதாக அர்த்தமில்லை. முதன்மையான தொழில் இருக்கக்கூடிய கோவைக்கு வந்திருந்த மத்திய நிதி அமைச்சர் கிரீம் பன் பற்றி ஒரு மணி நேரம் பேசி விட்டு சென்றார். கார்ப்பரேட் செக்டாரில் இருப்பவர்கள் எளிதில் அரசு அதிகாரிகளை சந்திப்பதற்கான சூழல் நிலவி வருகிறது. ஆனால் இவர்களுக்கு பின்னால் தான் சிறு குறு நடுத்தர தொழில் துறையினர் இருப்பது போல் தெரிகிறது. எந்த காலகட்டத்திலும் எந்த அரசு வந்தாலும் கார்ப்பரேட் செக்டாரில் இருப்பவர்கள் தான் முன்னால் நின்று அரசை இயக்குகிறார்கள். இதனை மாற்ற வேண்டும். அதற்கு இந்தக் கூட்டமைப்பு வலுபெற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.செய்தி: பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்.