விளையாட்டு
சூப்பர் ஓவர் போடுவதில் புதிய விதி அறிமுகம்… அனல் பறக்கப் போகும் ஐ.பி.எல் 2025!

சூப்பர் ஓவர் போடுவதில் புதிய விதி அறிமுகம்… அனல் பறக்கப் போகும் ஐ.பி.எல் 2025!
10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். 2025 டி20 தொடரின் 18-வது சீசன் இன்று சனிக்கிழமை (மார்ச் 22) முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது. ஐ.பி.எல் 2025 – சூப்பர் ஓவர் போடுவதில் புதிய விதி இந்நிலையில், ஐ.பி.எல் 2025 தொடரில் சூப்பர் ஓவர் போடுவதில் புதிய விதியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) அறிவித்துள்ளது. அதன்படி, ஐ.பி.எல் போட்டிகளில் சூப்பர் ஓவர்களுக்கு அதிகபட்சம் 1 மணி நேரம் வழங்கப்படும் என புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த நேரத்திற்குள் எத்தனை சூப்பர் ஓவர்கள் வேண்டுமானாலும் விளையாடிக்கொள்ளலாம். போட்டி டை ஆன 10 நிமிடத்திற்குள் முதல் சூப்பர் ஓவர் தொடங்கும். அதுவும் டை ஆகும் பட்சத்தில் அடுத்த 5 நிமிடத்தில் அடுத்த சூப்பர் ஓவர் தொடங்கும். நேரக் கட்டுப்பாட்டை பொறுத்து, எது கடைசி சூப்பர் ஓவராக இருக்கும் என கள நடுவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. சூப்பர் ஓவருக்கான பிற விதிகள்இதைத் தவிர, 10 அணிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது. அதில், முக்கிய போட்டியின் போது ஒரு அணிக்கு பெனால்டிகள் வழங்கப்பட்டால் இருந்தால், அது சூப்பர் ஓவருக்கு மாற்றப்படும். அந்தப் போட்டியின் சேஸிங் அணி முதலில் பேட்டிங் செய்வதன் மூலம் சூப்பர் ஓவர் தொடங்கும். போட்டி முடிந்த அதே முனையிலிருந்து தொடங்கப்படும். நடுவர்கள் மைதான அதிகாரிகள் மற்றும் போட்டி நடுவரைக் கலந்தாலோசித்து மாற்ற முடிவு செய்யாவிட்டால், சூப்பர் ஓவர் போட்டியின் அதே பிட்சையே பயன்படுத்தும்.முதல் சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்த பேட்டர்கள் அடுத்தடுத்த சூப்பர் ஓவர்களில் பேட்டிங் செய்ய தகுதியற்றவர்களாக இருப்பார்கள், அதே நேரத்தில் சூப்பர் ஓவரை வீசிய பந்து வீச்சாளர் அடுத்த ஓவருக்கு தகுதியற்றவராக இருப்பார்.”சூப்பர் ஓவர் அல்லது அடுத்தடுத்த சூப்பர் ஓவர்கள் முடிவதற்கு முன்பு எந்த காரணத்திற்காகவும் கைவிடப்பட்டால், போட்டி டையாக அறிவிக்கப்பட்டு பிரிவு 16.10.1 இல் உள்ளபடி புள்ளிகள் வழங்கப்படும்” என்றும் பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.