விளையாட்டு
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 286 ரன்கள் குவிப்பு; இஷான் கிஷன் அதிரடி சதம் – ராஜஸ்தான் அணிக்கு 287 ரன்கள் இலக்கு!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 286 ரன்கள் குவிப்பு; இஷான் கிஷன் அதிரடி சதம் – ராஜஸ்தான் அணிக்கு 287 ரன்கள் இலக்கு!
நடப்பு ஐ.பி.எல். சீசனின் 2-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 286 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷன் அதிரடியாக ஆடி சதம் பதிவு செய்தார்.ஐதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மாற்று கேப்டன் ரியான் பராக், பந்து வீச முடிவு செய்தார். அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இணைந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் இன்னிங்ஸை தொடங்கினர். அவர்கள் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். 11 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். தொடர்ந்து இஷான் கிஷன் களத்துக்கு வந்தார். இதுதான் சன்ரைசர்ஸ் அணிக்காக அவர் விளையாடும் முதல் போட்டி.ஹெட் உடன் இணைந்த அவர், 2வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 31 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஹெட் ஆட்டமிழந்தார். 9 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை அவர் விளாசினார். நிதிஷ் ரெட்டி, 15 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். கிளாஸன், 14 பந்துகளில் 34 ரன்கள் விளாசினார். சன்ரைசர்ஸ் அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்களின் ஸ்ட்ரைக் ரேட் 200+ என்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இதோடு ஓவருக்கு சராசரியாக 13+ ரன்கள் என்ற ஹைதராபாத் அணியின் ரன் ரேட்டையும் ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.இஷான் கிஷன், 45 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் அவர் விளையாடினார். இந்த இன்னிங்ஸில் 11 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இது இரண்டாவது அதிகபட்ச ரன்னாக அமைந்துள்ளது. 287 ரன்கள் எடுத்தால் இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெறும்.