விளையாட்டு
‘மும்பை பலமாக இருக்கு; ஆனா… தோனிக்காக சி.எஸ்.கே கோப்பை வெல்லணும்’: வர்ணனையாளர் முத்து பேட்டி

‘மும்பை பலமாக இருக்கு; ஆனா… தோனிக்காக சி.எஸ்.கே கோப்பை வெல்லணும்’: வர்ணனையாளர் முத்து பேட்டி
ச.மார்ட்டின் ஜெயராஜ்.10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். 2025 டி20 தொடரின் 18-வது சீசன் நேற்று சனிக்கிழமை (மார்ச் 22) முதல் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தாவை அவர்களது சொந்த மைதானத்தில் வைத்து வீழ்த்தி, வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது பெங்களூரு. இந்நிலையில், இந்தத் தொடரில் இன்று இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் அரங்கேறும் 3-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. இந்த நிலையில், இந்த இரு அணிகள் மற்றும் அவர்களது வீரர்கள் ஆட்டம் எப்படி இருக்கும் என்பது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து தனது கருத்தை ‘தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் பேசுகையில், “மும்பை ரொம்பவும் பலமான அணி. கடைசியாக நடந்த 2 சீசன்களில் அவர்கள் புள்ளிகள் பட்டியலில் கடைசியாக முடித்தது பெரும் சோகத்தை அளித்திருக்கும். ஏனெனில், அவர்கள் அப்படி கடைசி இடத்தில் தொடரை முடிக்கும் அணி கிடையாது. இந்த வருசமும் முந்தைய சீசன்கள் போல் நல்ல அணியை எடுத்திருக்கிறார்கள். உதாரணமாக, அவர்களது டாப் 5 வீரர்களை நீங்களே பாருங்கள். ரோகித் சர்மா, வில் ஜாக், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நமன் திர் என பேட்டிங்கில் சிறப்பாக உள்ளார்கள். பும்ராவுடன் பவுலிங்கில் சூப்பராகவும் இருக்கிறார்கள். ஆனால், பும்ரா ஒருசில போட்டிகளில் ஆட மாட்டார். அதனை அவர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பதைப் பார்ப்பதில் சுவாரசியமாக இருக்கும். இந்த தொடரில் ஒரு அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்து விட்டால் பிரச்சனை இல்லை. ஆனால், மோசமான தொடக்கம் கிடைத்தால் அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவது கடினம் ஆகிவிடும். இப்படியான சூழலில் மும்பை அணியால் நிச்சயம் மீண்டு வர முடியும். இதுஒருபுறம் இருந்தாலும், வலிமையான பேக்-அப் வீரர்கள் அவர்களிடம் இல்லை. இதேபோல், ஸ்பின் பவுலிங்கில் இன்னும் வீக்காக இருக்கிறார்கள். ஸ்பின் போட அந்த அணியில் மிட்செல் சாண்ட்னர் தவிர பெரிய வீரர்கள் இல்லை. சாண்ட்னர் சாம்பியன்ஸ் டிராபியில் எப்படி செயல்பட்டாரோ அதுபோல் இங்கும் ஆடினால் சூப்பராக இருக்கும். அவர் எனக்கு மிகவும் பிடித்த வீரர். ஆனால், ஜடேஜா அணியில் இருந்ததால் அவருக்கு சி.எஸ்.கே-வில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் வேறு எதாவது அணியில் இருந்திருந்தால் 60 போட்டிகளுக்கு மேல் ஆடி இருப்பார். சி.எஸ்.கே-வில் இருந்தபோது ஜடேஜாவிடம் இருந்து நிறைய கற்றுள்ளார். ஸ்பின் வீச சாண்ட்னர் இருந்தாலும், ஆட்டத்தை திசை திருப்பக்கூடிய மற்றொரு ஸ்பின்னர் அவர்களிடம் இல்லை. இடது கைது சுழற்பந்து வீச்சாளரான சாண்ட்னரால் போட்டியைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர, 4, 5 விக்கெட்டை சாய்த்து விட முடியாது. குறிப்பாக சென்னை ஆடுகளத்தில் அவரைக் கணித்து விடுவார்கள். சி.எஸ்.கே வழக்கம் போல் அந்த ஃபேமிலி (வானத்தைப்போல) மாதிரியான அதே அணியை எடுத்து இருக்கிறார்கள். ஐ.பி.எல் தொடரின் முதல் 14 சீசனை எடுத்துக் கொண்டால், அவர்கள் விளையாட சீசனைத் தவிர மற்ற அனைத்து சீசனிலும் பிளே ஆப்-பில் இருப்பார்கள். அவர்களுடன் மற்ற எந்த அணிகள் பிளே ஆப்-க்கு செல்லும் என்பது போன்றுதான் இருந்தது. ஆனால், சில சீசன்கள் பின்னடைவை சந்தித்து இருந்தார்கள். எனினும், ஒரு சீசனில் பிளே ஆப்-க்கு தகுதி பெறவில்லை என்றாலும், அடுத்த சீசனில் சாம்பியன்ஸ் ஆகி இருக்கிறார்கள். அதனால், இந்தமுறை தோனிக்காக அவர்கள் வெற்றி பெற்றால் சூப்பராக இருக்கும். அவர்களிடம் ஜெயிக்கும் அணி இருக்கிறது. அவர்களது ஆடும் லெவன் வீரர்களைப் பொறுத்தவரையில், தொடக்க வீரராக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இருப்பார். அவருடன் டெவோன் கான்வே அல்லது ரச்சின் ரவீந்திரா இருவரில் ஒருவர் தான் ஆட முடியும். நாம் எல்லோருமே ரச்சின் ரவீந்திரா பற்றி அதிகம் பேசுகிறோம். ஆனால், அவர் அடித்த சதம் அனைத்துமே ஒருநாள் போட்டியில் தான். டி-20-யில் இப்போது தான் அவர் வளர்ந்து வருகிறார். அதனால், தொடக்க போட்டிகளில் அவரை சென்னை அணி களமிறங்க வாய்ப்பில்லை. எனவே, தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே இருப்பார்கள். 3-வது வீரராக ராகுல் திரிபாதி வருவார். அந்த அணிக்காக அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா போன்றோர் என்ன ரோல் செய்தார்களோ அதைத்தான் ராகுல் திரிபாதியிடம் இருந்தும் எதிர்பார்ப்பார்கள். அவர் ஸ்பின்னர்களை இறங்கி வந்து அடிப்பார். அவருக்குப் பின் சிவம் துபே வருவார். ஸ்பின்னர்கள் எப்போது பந்துவீச வருவார்களோ அப்போதுதான் அவரும் வருவார். சாம் கர்ரன் ஒரு ஆச்சரியம் அளிக்கும் தேர்வு என்பேன். ஒரு கட்டத்தில் ரச்சின் ரவீந்திரா-வா? அல்லது சாம் கர்ரனா? என்கிற போட்டி வரலாம். ஸ்பின் ஆகும் ஆடுகளத்தில் ரச்சின் ரவீந்திரா-வையும், சீம் நிறைந்த ஆடுகளத்தில் சாம் கர்ரனையும் அவர்கள் ஆட வைக்கலாம். அதனால், 5-வது வீரராக சாம் கர்ரன் வரலாம். 6-வது வீரராக விஜய் சங்கர் அல்லது தீபக் ஹூடா ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். அடுத்ததாக ஜடேஜா, தோனி வருவார்கள். நான் கேள்விப்பட்டது வரை, அதாவது, சி.எஸ்.கே அணியில் இருக்கும் ஒருவர் இதனை என்னுடன் பகிர்ந்தார். அவர் சொல்லும் போது, கடந்த சீசனில் தோனி முட்டி வலியுடன் ஆடினார். ஆனால், இந்தமுறை நன்கு ஃபிட்டாக இருப்பதாகவும், 4, 5 வயது குறைந்துவிட்டது போல் அவர் இருக்கிறார் என்றும் அவர் என்னிடம் சொன்னார். அதனால், தோனி கடைசி 2 ஓவர்களை ஆட எப்படியும் வந்துவிடுவார். அவருக்குப் பின் அஸ்வின், நூர் அகமது, கலீல் அகமது ஆகியோர் இடம் பெறுவார்கள். இம்பேக்ட் வீரராக மதீஷா பத்திரனா இருப்பார். அல்லது கலீல் அகமது இருப்பார். இந்த வீரர்களுக்கு அவர்கள் என்ன ரோல் செய்ய வேண்டும் என்பதை தெளிவாக கூறியிருப்பார்கள். தவிர, சென்னை சாம்பியன் பட்டம் வென்றபோதெல்லாம் அணியில் நிறைய ஆல்ரவுண்டர்கள் இருந்திருக்கிறார்கள். இம்முறையும் அப்படித்தான் உள்ளார்கள். ஜடேஜா, சாம் கர்ரன் ரெகுலர் ஆல்ரவுண்டர்கள். ரச்சின் ரவீந்திராவால் ஓரளவுக்கு நன்றாக பவுலிங் போட முடியும். அதனால், அந்த ஏரியாவை நன்றாக கவர் செய்துவிட்டார்கள். சி.எஸ்.கே அணியில் எக்ஸ் ஃபேக்டர் வீரராக நூர் அகமது இருப்பார். ஸ்பின் எடுபடும் ஆடுகளங்களில் அவர் ரொம்பவும் சிறப்பாக செயல்படுவார். அதனால், அவருக்கு ஒரு பெரிய ரோல் இருக்கும் என நான் நினைக்கிறேன். பொதுவாக, இந்த அணி ரிஸ்ட் ஸ்பின்னர்களை நம்பி சென்றது இல்லை. எப்போதுமே அவர்கள் ஃபிங்கர் ஸ்பின்னர்களுடன் தான் சென்றுள்ளார்கள். ஆனால், இந்த முறை ஆப்கானைச் சேர்ந்த நூர் அகமது என்கிற ரிஸ்ட் ஸ்பின்னரை எடுத்து வந்துள்ளார்கள். அவர் எப்படி செயல்படுகிறார் என்பதைப் பார்ப்பதில் சுவாரசியமாக இருக்கும்.” என்று வர்ணனையாளர் பிரதீப் முத்து தெரிவித்தார்.