விளையாட்டு
’10 அணியில் ஓட்டை அதிகம் இருக்கும் அணி இது’… வர்ணனையாளர் முத்து பேட்டி

’10 அணியில் ஓட்டை அதிகம் இருக்கும் அணி இது’… வர்ணனையாளர் முத்து பேட்டி
ச. மார்ட்டின் ஜெயராஜ் .10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். 2025 டி20 தொடரின் 18-வது சீசன் சனிக்கிழமை (மார்ச் 22) முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று இரவு 7:30 மணிக்கு நடக்கும் விசாகப்பட்டினத்தில் நடக்கும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், இந்த இரு அணிகள் மற்றும் அவர்களது வீரர்கள் ஆட்டம் எப்படி இருக்கும் என்பது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து தனது கருத்தை ‘தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் பேசுகையில், “இந்த தொடரில் பங்கேற்று இருக்கும் 10 அணிகளை நான் எடுத்து வைத்துப் பார்த்தால் இந்த அணியில்தான் (லக்னோ) அதிக ஓட்டைகள் இருப்பதாக தெரிகிறது. லக்னோ அணி டாப் 4-ல் கூட இடம் பிடிக்க வாய்ப்பில்லை. அவர்கள் அணியின் உரிமையாளர் கேப்டன்சி விவகாரத்தில் எப்படி தலையீடு செய்தார் என்பதை நாம் கடந்த சீசனில் பார்த்தோம். அது அந்த அணிக்கு பலம் சேர்க்காது. கே.எல் ராகுலுக்கு செய்ததை போலவே ரிஷப் பண்ட்டுக்கும் செய்தால், அது அனைவராலும் விரும்புவது போல் இருக்காது. ரிஷப் பண்ட்டைப் பொறுத்தவரையில், அவருக்கு இது மிக முக்கியமான சீசன். ஏனெனில், இந்திய டெஸ்ட் அணியில் மட்டும் தான் அவர் கீப்பராக இருக்கிறார். ஒருநாள் அணியில் கே.எல் ராகுலும், டி20 அணியில் சஞ்சு சாம்சனும் உள்ளனர். அதனால், இந்த இரண்டு அணிகளுக்குள் பண்ட் மீண்டும் நுழைய அவர் தன்னைத் தானே நிரூபித்துக் காட்ட வேண்டியுள்ளது. அந்த வெறியில் அவரும், அவரது தலைமையிலான அணியும் ஆடினால், அவர்கள் நல்ல ரிசல்ட்டை எதிர்பார்க்கலாம். ஐடன் மார்க்ராம், நிக்கோலஸ் பூரான் போன்ற திறமையான வீரர்களை அவர்கள் வைத்துள்ளனர். உலக டி20 அரங்கில் சிறந்த வீரராக நிக்கோலஸ் பூரான் இருக்கிறார். கடந்த சீசனில் கூட சிறப்பாக இருந்தார். ஆனால், போட்டியை வெல்ல முடியவில்லை. அவர் களத்திற்கு வருவதற்குள் அணி பெரும் சரிவை சந்தித்து இருக்கிறது. அதுமாதிரி போகாமல் பார்த்துக் கொள்ள இந்த முறை மிட்செல் மார்ஷ் வெறும் பேட்டராக ஆட இருக்கிறார். அவருக்கு காயம் பிரச்சனை இருப்பதாலும் அவர் பவுலிங் போட வாய்ப்பில்லை. அவர் தங்களுக்கு நல்ல தொடக்கம் கொடுப்பார் என லக்னோ அணியினர் நினைப்பார்கள். எனக்கு தெரிந்த வரையில் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை டெல்லி நல்ல அணியாக அமைந்திருக்கிறது. அணியின் நிர்வாகம் மாறியுள்ளது. அதாவது, புதிய தலைமைப் பயிற்சியாளர் (ஹேமங் பதானி) வந்துள்ளார். தனக்கு வழங்கப்பட்ட கேப்டன்சியை கே.எல் ராகுல் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஏனெனில், கேப்டன்சி பொறுப்பால் அவரது பேட்டிங் சரிவு அடைவதாக ராகுல் உணர்ந்து இருக்கலாம். இதுஒரு தவறான நகர்வு கிடையாது. இந்த அணியில் நான் கவனித்த மற்றொரு விஷயம், அணியில் இருக்கும் பாதி வீரர்கள் தங்களது 2-வது சீசனில் தான் ஆடுகின்றனர். ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல் போன்ற முக்கிய வீரர்களுக்கு இது 2-வது சீசன் தான். அவர்கள் முதல் சீசனில் சிறப்பாக ஆடி இருந்தாலும், இந்த சீசனில் அவர்கள் எப்படி ஆடுவார்கள் என்பதை பவுலர்கள் கணித்து இருப்பார்கள். அதனால், அவர்கள் எப்படி அதனைத் தாண்டி வரப்போகிறார்கள் என்பது தான் கேள்வி. பவுலிங் வரிசையை இந்த முறை மேலும் வலுப்படுத்தி இருக்கிறார்கள். ஸ்டார்க், நடராஜன், முகேஷ் குமார் என முன்னணி வீரர்கள் உள்ளனர். மேட்ச் வின்னிங் ஸ்பின்னராக குலதீப் உள்ளார். அதேபோல் அக்சர் படேல் இருக்கிறார். அவரது கேப்டன்சியை பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன். அவர் இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக இருக்கிறார். அவர்களுக்கு அணி சிறப்பாக அமைந்துவிட்டது. ஃபாஃப் டு பிளெசிஸ் போன்ற மூத்த வீரர் அணியை கூட இருந்து வழிநடத்த உதவுவார். இவர்களின் ஆட்டத்தைப் பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன்.” என்று வர்ணனையாளர் பிரதீப் முத்து கூறினார்.