விளையாட்டு
GT vs PBKS: சம பலம் கொண்ட அணிகள்… கணிப்பது கஷ்டம்: வர்ணனையாளர் முத்து பேட்டி

GT vs PBKS: சம பலம் கொண்ட அணிகள்… கணிப்பது கஷ்டம்: வர்ணனையாளர் முத்து பேட்டி
10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். 2025 டி20 தொடரின் 18-வது சீசன் சனிக்கிழமை (மார்ச் 22) முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று இரவு 7:30 மணிக்கு நடக்கும் அகமதாபாத்தில் நடக்கும் 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், இந்த இரு அணிகள் மற்றும் அவர்களது வீரர்கள் ஆட்டம் எப்படி இருக்கும் என்பது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து தனது கருத்தை ‘தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் பேசுகையில், “பஞ்சாப் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் போல் தான். வருடா வருடம் எல்லாவற்றையும் மாற்றுவார்கள். ஆனால், இந்த வருடம் ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளராக இணைந்து இருக்கிறார். அவர் அணியின் பொறுப்பை எடுத்தவுடன் சொன்னது, தனக்கு நீண்ட வருடன் பணியாற்றும் வாய்ப்பு தேவை என்று கூறியிருக்கிறார். அத்துடன், முன்பு எல்லா பயிற்சியாளர்களையும் மாற்றிக் கொண்டே இருந்தது போல் இருக்கக் கூடாது என கண்டிஷன் போட்டுள்ளார். அதனால், அவருக்கு நீண்ட வருடத்திற்கான ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருப்பதாக நான் கேள்விப்படுகிறேன். இப்போது அவருடைய முயற்சியால்தான் ஷ்ரேயாஸ் பஞ்சாப் அணிக்கு வந்திருக்கிறார். எனவே, அவரும் இந்த அணியில் நீண்ட வருடங்கள் இருக்கும் வாய்ப்புள்ளது. ஆனால், இப்போது எழும் கேள்வி என்னவென்றால், கொல்கத்தா அணிக்காக ஷ்ரேயாஸ் செய்தது போல் பஞ்சாப் கிங்ஸ்சுக்கும் செய்ய முடியுமா? என்பதுதான். அவர்களது அணியைப் பொறுத்தமட்டில், 220 முதல் 260 ரன்கள் வரை எடுக்கும் அணியை வைத்திருக்கிறார்கள். அதேநேரத்தில், பவுலிங்கில் எந்த அளவுக்கு கட்டுப்படுத்துவார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அதற்காக அவர்கள் யுஸ்வேந்திர சாஹலை வைத்துள்ளார்கள். ரொம்ப நன்றாக பவுலிங் போடும் அர்ஷ்தீப் சிங் இங்குதான் இருக்கிறார். இதேபோல், மார்கோ ஜான்சன் அவர்கள் அணியில் தான் இருக்கிறார். பிளேயர்கள் எனப் பார்க்கும்போது, கடந்த சீசனை விட சிறந்த வீரர்களை வைத்துள்ளார்கள். ஆனால், அதிகம் சுழலும் பிட்ச்களில் அவர்களது பேட்ஸ்மேன்கள் திணற வாய்ப்புள்ளது. ஷ்ரேயாஸ் சிறப்பாக ஆடினாலும், அவருடன் இணைந்து ஸ்பின் ஆடப்போவது யார்? மேக்ஸ்வெல் ஸ்பின் ஆடுவார், ஆனால், எப்போதாவதுதான் சிறப்பாக ஆடுவார். அதனால், அங்கு சிக்கிக் கொள்ளலாம். தொடரை சிறப்பாக தொடங்கினாலும், தொடரின் நடுவில் அவர்கள் மாட்ட வாய்ப்புள்ளது. அதனை சமாளிக்கத் தான் அவர்களிடம் நல்ல ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். அஸ்மத்துல்லா ஓமர்சாய், மார்கோ ஜான்சன், மார்கஸ் ஸ்டோனிஸ் போன்ற ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். ஆனால், போட்டியில் எப்படி ஆடுவார்கள் என்பதைப் பார்ப்பதில் சுவாரசியமாக இருக்கும். சீம் பவுலிங் போட அர்ஷ்தீப் சிங் உடன் லாக்கி பெர்குசன், விஜய்குமார் வைஷாக் போன்ற வீரர்கள் வருவார்கள். முதல் தொடக்க வீரர் என்ற இடத்தில் பிரப்சிம்ரன் சிங் பெயரை முதலில் எழுத்து வைத்துவிடலாம். அவருடன் இணைந்து மற்றொரு தொடக்க வீரராக ஜோஷ் இங்கிலிஸ் அல்லது நேஹால் வதேரா வரலாம். அடுத்து ஷ்ரேயாஸ், ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் வரலாம். இந்த ஆடரை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். பினிஷிங் கொடுக்க, கடந்த சீசனில் சிறப்பாக ஆடிய ஷஷாங்க் சிங் வருவார். குஜராத் அணி பற்றி பேசும்போது, நீங்கள் ஒரு புதிய அணியை லீக்கிற்குள் கொண்டு வருகிறீர்கள். அந்த அணி தனது தொடக்க சீசனில் சாம்பியன் பட்டம் வெல்கிறது. அடுத்த சீசனில் இறுதிப் போட்டி வரை வருகிறது. ஆனால், அதற்கு சீசனில் அணி எங்கே இருக்கிறது என்பது போல் ஆகிவிடுகிறது. அதற்காக, நாமும் கொஞ்சம் வருத்தப்பட்டோம். இந்த சீசனில் அதனைப் போக்க அவர்கள் என்ன செய்து இருக்கிறார்கள் என்று பார்த்தால், நல்ல அனுபவமுள்ள ஜோஸ் பட்லரை கொண்டு வந்துள்ளார்கள். இதுஒரு நல்ல தேர்வு என்பேன். இதேபோல், மற்றொரு நல்ல தேர்வாக கிளென் பிலிப்ஸை நான் பார்க்கிறேன். அவர் இந்த தொடரில் கிட்டத்தட்ட 4, 5 அணிகளில் இருந்துள்ளார். ஆனால், அவருக்கான வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. தற்போது அவர் இருக்கும் ஃபார்மிற்கு அவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவரைப் பார்க்க நாங்கள் எல்லோரும் ஆவலுடன் இருக்கிறோம். குஜராத் அணியில் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் – சாய் சுதர்சன் வழக்கம் போல் களமிறங்குவார்கள். அடுத்து பட்லர் ஆடுவார். வாஷிங்டன் சுந்தர் அவர்களின் நல்ல தேர்வு. அந்த அணியில் நிறைய தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களும் இருக்கிறார்கள். சாய் கிஷோர், ஷாருக்கான், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் என ஒரு பட்டாளமே அங்கு இருக்கிறார்கள். குஜராத் தமிழன்ஸ் என்கிற பெயருடன் செல்கிறார்கள். சீம் பவுலிங்கில் ஷமி விட்ட இடத்தை முகமது சிராஜ் நிரப்புவாரா? என்கிற சந்தேகம் இருக்கிறது. ககிசோ ரபாடா-வும் அவர்களின் நல்ல தேர்வு. அவரும் அசத்தலாக விக்கெட் எடுப்பார். இவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக இருந்துள்ளார். ஆனால், டி-20 என வரும் போது ஒருசில அடிகள் வாங்கலாம். அதனால், இங்கு சிறிய பிரச்சனை இருப்பது போல் தோன்றுகிறது. ஸ்பின் என வரும்போது குஜராத் அணியின் நட்சத்திரம் ரஷித் கான் இருக்கிறார். அவருடன் இணைந்து வீச சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் இருக்கிறார்கள். அதனால், ஸ்பின் பவுலிங் சிறப்பாக இருக்கிறது.” என்று வர்ணனையாளர் பிரதீப் முத்து கூறினார்.