Connect with us

இந்தியா

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் ராம் சேது மணல் திட்டுக்களில் அரிய வகை கடல் ‘ஆலா பறவை’!

Published

on

Loading

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் ராம் சேது மணல் திட்டுக்களில் அரிய வகை கடல் ‘ஆலா பறவை’!

இராமநாதபுரம் மன்னார் வளைகுடா பகுதியில் இலங்கையையும். இந்தியாவையும் இணைக்கும் ராம் சேது மணல் திட்டுக்களில் ஆறு அரிய வகை கடல் ஆலா பறவை இனங்களின் மிகப் பெரிய இனப்பெருக்க தளம் கண்டறியப்பட்டுள்ளது.

இதனை இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளையின் ரவீந்திரன், பறவை ஆய்வாளர்கள் பைஜு, மைத்ரி, பேராசிரியர் ரவிச்சந்திரன், உயிரியலாளர் மார்சல் இணைந்த குழுவினர், ராமநாதபுர வனத்துறையின் வன உயிரின பிரிவுடன் இணைந்து தங்களின் தொடர் ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளனர். இது குறித்த ஆய்வறிக்கை ‘journal of threatened taxa’ வில் வெளியாகி உள்ளது.

Advertisement

மன்னார் வளைகுடா பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளை ராமநாதபுரம் வனத்துறையுடன் இணைந்து அம்மாவட்ட பறவை சரணாலயங்களில் பறவைகளின் வருகை, இனப்பெருக்கம், வலசை பறவைகளின் வருகை,எண்ணிக்கை, புதிய வாழ்விட பகுதிகளை கண்டறிவது என பணி செய்து வருகிறது.

கடந்த ஆண்டுகளில் அனுமன் உப்புகொத்தி, நண்டுண்ணி உள்ளான், ஆழிக் கழுகு, கண்டங்கள் கடந்து வரும் ஆல்பட்ரஸ், ஆர்ட்டிக் ஸ்குவா, பழுப்பு ஆலா, மற்றும் அரிய ஆழ் கடல் பகுதிகளில் மட்டுமே வாழும் பறவை இனங்களை கண்டறிந்து மன்னார் வளைகுடா பகுதியின் அரிய பறவையினங்களை பட்டியல் இட்டு உள்ளார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆழ் கடல் பறவையினங்களின் வருகையை பதிவு செய்து கொண்டு இருந்த போது பிரிட்ல்டு ஆலா , சாண்டர்ஸ் ஆலா, சிறிய ஆலா, பெரிய கொண்டை ஆலா மற்றும் ரோஸேட் ஆலா மற்றும் சிறிய பெரிய பழுப்பு ஆலாக்களின் (Bridled Tern, Saunder’s Tern, Little Tern, Greater Crested Tern and Roseate Tern, Brown Noddy) எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகரிப்பது கண்டு அங்குள்ள மணற்திட்டுக்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

Advertisement

அதன் மூலம் இந்திய கிழக்குக் கடற்கரை பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் ஆலா பறவையினங்கள் அதிக எண்ணிக்கையில் இனப்பெருக்கம் செய்வது கண்டறியப்பட்டது. குறிப்பாக மூன்று மற்றும் ஏழாம் மணற்திட்டு பகுதியில் பண்ணிரண்டு ஆயிரத்திற்கும் அதிகமான ஆலா பறவைகள் இனப்பெருக்கம் செய்வது கண்டறியப்பட்டுள்ளது.

ஆறு வெவ்வேறு ஆலா பறவை இனங்கள் ஒரே பகுதியை தேர்வு செய்து ஆயிரக்கணக்கில் இனப்பெருக்கம் செய்வது ஒரு அரிய நிகழ்வாகும்.

ஆனால், இதன் முக்கியத்துவத்தை இப்பகுதியில் உள்ள மீனவர்களோ, கடலோர காவல் படையினரோ அறிந்திருக்க வில்லை. ஆலா பறவைகளின் இனப்பெருக்க காலத்தில் இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் ஆலா பறவைகளின் முட்டைகள், குஞ்சுகளை திருடிச் செல்வது உள்ளூர் மீனவர்களால் உறுதி செய்யப்பட்டது. இந்த அரிய வகை ஆலா பறவை இனங்களை பாதுகாப்பது குறித்து உள்ளூர் மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவற்றை அவர்கள் பில்லுக் குஞ்சி என்று அழைக்கிறார்கள். பொதுவாக ஆலா பறவைகளை கடலில் மீன்கள் அதிகம் இருக்கும் பகுதியை அடையாளம் காட்டும் பறவைகளாக மூத்த மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Advertisement

நீர்நிலைகளின் நடுவில் மரங்களில் கூடு கட்டும் பறவைகளின் வாழ்விடங்களை பறவைகள் சரணாலயமாக அரசு அறிவிக்கிறதோ, அது போல நிலத்தில், மணற்திட்டுகளில் அதிக எண்ணிக்கையில் கூடு கட்டி வாழும் பறவையினங்கள் உள்ள பகுதிகளையும் மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்கப் பட்ட சரணாலயப் பகுதிகளாக அறிவித்து இந்தியாவின் பல்லுயிர்த் தன்மையை பாதுகாக்க வேண்டும்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன