விளையாட்டு
ஏலத்தில் யாரும் வாங்கவில்லை… வாழ்க்கையை மாற்றிய அந்த போன் கால்: ஷர்துல் தாக்கூர் ஐ.பி.எல்-லுக்கு திரும்பியது எப்படி?

ஏலத்தில் யாரும் வாங்கவில்லை… வாழ்க்கையை மாற்றிய அந்த போன் கால்: ஷர்துல் தாக்கூர் ஐ.பி.எல்-லுக்கு திரும்பியது எப்படி?
10 அணிகள் களமாடி வரும் ஐ.பி.எல். 2025 டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்த தொடருக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ஆடி வருகிறார் இந்திய வீரர் ஷர்துல் தாக்கூர். நடப்பு தொடரில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் அவர், இதுவரை நடந்த 2 போட்டிகளில் 8.83 என்ற எக்கனாமியில் 6 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். அத்துடன் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக பர்ப்பிள் நிற தொப்பியை வசப்படுத்தி இருக்கிறார். ஆங்கிலத்தில் படிக்கவும்: Unsold in auction, how a phone call from Zaheer Khan paved the way for Shardul Thakur’s return to IPLமும்பையைச் சேர்ந்த ஷர்துல் தாக்கூரை 2014 ஆம் ஆண்டில் பஞ்சாப் அணி எடுத்தது. ஆனால், அவர் அறிமுகமாகியது 2015 ஆம் ஆண்டில், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காகத் தான். இதன்பிறகு, 2017 ஆம் ஆண்டு, ஐ.பி.எல்-லின் 10-வது சீசனுக்காக ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அவரை வாங்கியது. ஜனவரி 2018 இல், அடுத்த சீசனுக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை வாங்கியது.சென்னை அணியில் 2021 வரை இருந்த அவர், பிறகு, 2022-ல் டெல்லி கேபிடல்ஸ், 2023-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக ஆடினார். 2024-ல் மீண்டும் சென்னை அணிக்காக ஆடினார். ஆனால், சென்னை அணி இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2025 ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்திற்கு முன்னதாக அவரை தக்கவைக்கவில்லை. சிறிய அளவில் ஏமாற்றம் இருந்தாலும், ஏலத்தில் போது 10 அணிகளில் ஏதாவது ஒரு அணி தன்னை வாங்கி விடுவார்கள் என்கிற நம்பிக்கையில் இருந்துள்ளார் ஷர்துல். ஆனால், 33 வயதான அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. அவருக்குப் பதில் நிதீஷ் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். இதனால், மனமுடைந்த அவர், ஏலத்திற்கு முந்தைய வாரங்களில், சில அணி உரிமையாளர்களிடம் தன்னை ஒரு முறை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். தான் இதுவரை 5 ஐ.பி.எல் அணிகளுக்காக 95 போட்டிகளில் விளையாடி இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதனிடையே, ஷர்துல் தனது சக இந்திய அணி வீரர் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், அந்த வீரர் இடம் பெற்றுள்ள அணியில் தன்னையும் சேர்த்துக் கொள்ள பரிந்துரை செய்ய வேண்டிக் கேட்டுள்ளார். இந்திய அணியில் மீண்டும் இடம் பெற ஐ.பி.எல் பெரிய கதவாக இருக்கும் நிலையில், எப்படியாவது 10 அணிகளில் ஒரு அணியில் ஆடி விட வேண்டும் என பெரும் முயற்சி போட்டார் ஷர்துல். கடந்த நவம்பரில் 366 இந்திய வீரர்கள் பதிவு செய்திருந்த ஏலத்திற்கு ஒரு நாள் முன்பாக, அவருக்கு நம்மிக்கை அளிக்கும் வகையில் சில அணிகள் அவரை ஏலத்தில் எப்படியாவது வாங்கும் முடிவில் இருப்பதாக கூறியுள்ளார்கள். அதனால், அவரும் குஷியில் இருந்துள்ளார். ஆனால், இரண்டு நாள் ஏலம் முடிவில் கடைசி வரை ஒரு அணி கூட அவரை வாங்க முன்வரவில்லை. “நான் அவ்வளவு மோசமாக விளையாடுகிறேனா?, ஏலத்தில் நான் தேர்வு செய்யப்படாதபோது அது ஒரு மோசமான நாள் என நினைத்தேன். கிரிக்கெட்டில் ஏற்ற தாழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கும்” என்று ஷர்துல் தாக்கூர் அப்போது கூறியிருந்தார். வேதனையும், சோகமும் அவரை சூழ்ந்திருந்த நிலையில், அங்கேயே தங்கி விடாமல், மற்ற வாய்ப்புகளை தேடிப் பார்த்தார் ஷர்துல். அந்த நேரத்தில், அவருக்கு இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதற்காக எசெக்ஸ் அணியுடன் அவர் ஒப்பந்தம் போட்டார். ஆனால், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன் ஷர்துல், ஒருவேளை ஏதாவது ஒரு ஐ.பி.எல் அணியில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததால், அந்த அணிக்காக ஆட சென்று விடுவதாக கண்டிஷன் போட்டிருந்தார். அப்போது கூட அவரின் உள்ளுணர்வு, தனக்கான ஐ.பி.எல் கதவுகள் இன்னும் முழுமையாக மூடப்படவில்லை என்பதை சொல்லிக் கொண்டிருந்தது. “வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைவது இயல்புதான். யாருக்குத் தெரியும், நான் வேறு எந்த அணிக்காகவும் ஆடலாம். ஏதாவது ஒரு அணியில் இருந்து எனக்கு அழைப்பு வரலாம். இல்லையென்றால் நான் இங்கிலாந்துக்குச் சென்று கவுண்டி கிரிக்கெட் விளையாடுவேன்,” என்று ஷர்துல் அப்போது தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியிருந்தார்.கடைசியில், அவர் கொண்டிருந்த நம்பிக்கை உண்மையாகிப் போனது. கடந்த டிசம்பரில் விஜய் ஹசாரே டிராபியில் விளையாடும்போது மொஹ்சின் கான் காயம் அடைந்தார். அவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ரூ. 4 கோடிக்கு ஏலத்தில் வாங்கியிருந்தது. ஆனால், அவர் தொடரில் பங்கேற்க முடியாத நிலையில், அவருக்கு மாற்றாக ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார். தற்போது இந்த சீசனில் களமிறங்கி விக்கெட் வேட்டை நடத்தி வருகிறார். அவரின் கிரிக்கெட் வாழக்கையில் இத்தகைய திருப்பத்தை அளித்தது அந்த ஒரு போன் கால் தான். அதனை அவருக்கு முன்னாள் இந்திய வீரரும், லக்னோ அணியின் வழிகாட்டியுமான ஜாகீர் கான் தான் செய்திருந்தார். “நான் ஐ.பி.எல்-க்கு தேர்வு செய்யப்படாவிட்டால் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடலாம் எனக் கையெழுத்திட்டிருந்தேன். ஆனால் ரஞ்சி நாக் அவுட்களில் விளையாடும்போது, ஜாகீரிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர்கள் என்னை சாத்தியமான மாற்றாகப் பார்த்தனர். ‘எனவே, உங்களை நீங்களே சோகக் கனலில் மறைத்துக் கொள்ளாதீர்கள். நாங்கள் உங்களை மாற்றாகச் சேர்த்தால், நீங்கள் உடனடியாக பயிற்சியை தொடங்க வேண்டும்’ என்றார். அன்றுதான் நான் ஐ.பி.எல் சோனில் மீண்டும் இணைந்தேன், ”என்று கடந்த வியாழக்கிழமை சன்ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு எதிரான நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு ஷர்துல் தாக்கூர் கூறினார்.லக்னோ அணிக்காக ஷர்துல் ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்பு, அவர் பந்துவீச்சு ட்ரையல்ஸுக்காக லக்னோ செல்ல வேண்டியிருந்தது. அதற்காக அவர் லக்னோவுக்கு விமானம் மூலம் சென்றார். ஆனால், பெங்களூருவில் உள்ள சிறப்பு மையத்தில் உடற்தகுதி சோதனைகள் நடக்கும் என அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் பெங்களூருவுக்கு விரைந்தார். அங்கு இருந்த நாட்களின் போது, அவருக்கு மற்றொரு அணியில் இருந்து அழைப்பு வந்துள்ளது. லக்னோ அணி கொடுக்கும் சம்பளத்தை விட கூடுதலாக தருவதாகவும், உடனடியாக தங்களது அணியில் சேருமாறும் அவரிடம் கேட்டுள்ளனர். ஆனால் ஷர்துல் தாக்கூர், தனது நண்பர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, லக்னோ அணியை விட்டு வெளியேறுவது ‘நெறிமுறைக்கு மாறானது’ என்று நம்பியுள்ளார். மேலும், ஏலத்தில் தன்னை எந்தவொரு அணியும் வாங்க முன்வராத நிலையில், இப்போது ஒரு அணி தன்னை சேர்த்துக் கொண்டுள்ளது. அதனால், அவர் தனது நெருங்கிய நண்பரிடம், “பணம் முக்கியம். அதற்காக நெறிமுறைகளை மீறுவது அவசியமில்லை” என்று கூறியதாக நம்பப்படுகிறது.இறுதியில், லக்னோ அணி அவரை அவரது அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.