பொழுதுபோக்கு
ரசிகர்கள் அட்டகாசம்; டென்ஷனில் கத்திய நடிகர் விக்ரம் – திண்டுக்கல் தியேட்டரில் பரபரப்பு!

ரசிகர்கள் அட்டகாசம்; டென்ஷனில் கத்திய நடிகர் விக்ரம் – திண்டுக்கல் தியேட்டரில் பரபரப்பு!
இயக்குநர் அருண் குமார் – நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் வீர தீர சூரன்-2. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விக்ரம் வீர தீர சூரன் படத்தை விளம்ரப்படுத்தும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார். தமிழ்நாடு முழுக்க பல்வேறு திரையரங்குகளுக்கு சென்று நடிகர் விக்ரம் ரசிகர்களுடன் படம் பார்த்து வருகிறார். அந்த வரிசையில், தற்போது நடிகர் விக்ரம், துஷாரா விஜயன் திண்டுக்கல் மாவட்டம் சாணர்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை நேரில் கண்டு ரசித்தனர். விக்ரம் மற்றும் துஷாரா விஜயனை பார்த்து மாடுபிடி வீரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. முன்னதாக, திண்டுக்கல் உமா ராஜேந்திரா திரையரங்கில் வீர தீர சூரன் படத்தை பார்ப்பதற்காக விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் வருகை தந்தனர். மேலும், விக்ரமை பார்க்க வந்த ரசிகர்களால் சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விக்ரமை நேரில் காண ஆர்வமாக இருந்த சில ரசிகர்கள், முதல் மாடியில் உள்ள கண்ணாடிகளை உடைத்து, ஆபத்தான முறையில் திரையரங்கில் செல்ல முயன்றனர். மேலும், திரையரங்கின் முன்பு அதிக சத்தம் எழுப்பும் வெடிகளை வெடித்ததால், ஒலி மற்றும் காற்று மாசு அதிகரித்து மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது.திரையரங்குக்குள் வந்த விக்ரம் காரை விட்டு இறங்க விடாமல் ரசிகர்கள் கார்களுக்கு மேல் ஏறினர். இதனால் காரின் உள்ளே இருந்து விக்ரம் திரையரங்குக்குள் எவ்வாறு வர முடியும் என ரசிகர்களிடம் கோபத்துடன் பேசினார். அதன் பின்பு திரையரங்குளிருந்து வந்த பவுன்சர்கள் மிக கஷ்டப்பட்டு விக்ரமை உள்ளே அழைத்துச் சென்றனர்.