உலகம்
ரஷ்யாவின் நுணுக்கமான அதிரடி தாக்குதல்!

ரஷ்யாவின் நுணுக்கமான அதிரடி தாக்குதல்!
மார்ச் மாத ஆரம்பத்தில் 800 ரஷ்ய சிறப்புப் படைகள் சுட்ஜாவில் உக்ரைன் படைகள் மீது மறைமுகத் தாக்குதலை நடத்தியுள்ளன. நுணுக்கமாக ரஷ்ய படையினர் திட்டமிட்டு நடத்திய அதிரடி தாக்குதல் உக்ரைன் அரசையே கடுமையாக பாதித்துள்ளது.
போருக்கு முந்திய காலத்தில், உக்ரைன் வழியாக ஐரோப்பாவிற்கு எரிவாயுவை எடுத்துச் செல்லும் குழாய் வழியாக 15 கிலோமீட்டர் தூரம் ஊர்ந்து சென்று மறைமுகத் தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலத்தடி எரிவாயு குழாய் வழியாக நீண்ட பல கிலோமீட்டர் தூரம் ரஷ்ய வீரர்கள் ஊடுருவி ஊர்ந்து சென்றனர். ரஷ்ய படை வீரர்கள் ஒட்சிசன் முகமூடிகளை அணிந்து, தண்ணீர் மற்றும் மீதேன் புகைகளை பல நாட்கள் இரகசியமாக காவி, ரஷ்யாவின் தெற்கு கூர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள சுட்ஜா என்ற நகரத்திற்குள் ஆழ ஊடுருவி நகர்ந்தனர்.
கூர்ஸ்க் பிராந்தியம் மீது கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் உக்ரேன் படைகளால் படையெடுக்கப்பட்டது. இந்த தாக்குதலில் உக்ரைன் ஈட்டிய குறுகிய கால வெற்றி கிரெம்ளினுக்கு பாரிய சங்கடத்தை ஏற்படுத்தியது.
உக்ரைன் படைகளை வேரோடு பிடுங்க ரஷ்ய தளபதிகள் ஆயிரக்கணக்கான வீரர்களை சண்டையில் ஈடுபடுத்தினர்.இறுதியாக மார்ச் 8 ஆம்திகதி, சுட்ஜாவின் புறநகரில் குழாய்வழியில் ஊடுருவும் பெரும் எண்ணிக்கையிலான ரஷ்ய வீரர்கள் உக்ரேன் துருப்புக்களை விரட்டியடிக்க ஈடுபடுத்தப்பட்டனர்.
அடுத்த வந்த நாட்களில், உக்ரேன் துருப்புக்கள் கூர்ஸ்கில் கணிசமான நிலப்பரப்பை இழந்தன, சில இடங்களில் உக்ரேன் படைகள் திடீரென பின்வாங்கப்பட்டன. இம்மாதம் மார்ச் 13 அன்று, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் சுட்ஜாவை தாங்கள் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறியது.
ரஷ்யாவின் நுணுக்கமான அதிரடி தாக்குதலால் திகைத்துப் போன உக்ரேனிய வீரர்கள் கூர்ஸ்க் பிராந்தயத்தில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்த ‘ஒப்பரேஷன் பைப்லைன்’ தாக்குதலுக்குப் பிறகு கூர்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய இராணுவம் பாரிய முன்னேற்றங்களை அடைந்துள்ளது.
ரஷ்யா மீட்ட கூர்ஸ்க்:
தென்மேற்கு கூர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரேனியப் படைகளிடமிருந்து 100 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பையும் 12 கிராமங்களையும் மீட்டெடுத்துள்ளதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக கூர்ஸ்க் பிராந்தியத்தில் “ஒப்பரேஷன் பைப்லைன்” ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு எதிராக உக்ரேன் படைகள் முகங்கொடுக்க முடியாமல் திணறுகின்றன.இந்த ஒப்பரேஷன் பைப்லைனில் 11ஆவது காவலர் வான் தாக்குதல் படையணி, 72ஆவது மோட்டார் பொருத்தப்பட்ட ரைபிள் பிரிவின் 30ஆவது படைப்பிரிவு, அக்மத் சிறப்புப் படைவீரர்கள் மற்றும் வோஸ்டாக் V தாக்குதல் படையணிகள் அடங்கிய கூட்டுத் தாக்குதல் பிரிவு அடங்கியிருந்தது. கூர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள சுட்ஜா நகரத்தைக் கைப்பற்றுவதற்கான ரஷ்ய இராணுவத்தின் நடவடிக்கை உக்ரேனியப் படைகளுக்கு ஒரு அச்சுறுத்தலாக மாறியது. ஏனெனில் அவர்கள் முற்றிலும் திசைதிருப்பப்பட்டு சரணடைய வழிவகுத்தது என்று ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல் பற்றி சிறப்புப் படைப் பிரிவின் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் அப்டி அலாவுடினோவ், கூறுகையில் கூர்ஸ்க் வீழ்ச்சியடைந்து பிடிக்கப்பட்ட பிறகும், உக்ரேனிய வீரர்களுக்கு என்ன நடந்தது என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாததால் அவர்கள் திகிலடைந்தனர் என்றார்.
அமெரிக்க இராணுவ உதவி நிறுத்தம்:
கூர்ஸ்க் பகுதியில் கடந்த மாதத்தில் ரஷ்யாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள், உக்ரைன் படைகளை சுற்றி வளைக்கும் அபாயத்தில் ஆழ்த்தியதாக இராணுவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைனுக்கு இராணுவ உதவி மற்றும் உளவுத்துறை பகிர்வை நிறுத்தியதை ரஷ்யா சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் கூர்ஸ்க் பிராந்தியத்தில் அதன் படைகள் முதன்முதலில் நுழைந்தபோது உக்ரைன் 1,376 சதுர கிலோமீட்டர் நிலத்தைக் கைப்பற்றியது. ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசம் ரஷ்யாவுடனான எதிர்கால அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பேரம் பேச பலனளிக்கும் என்று மேற்குலக நாடுகள் நம்பின.
ரஷ்யா தொடர்ந்து முன்னேறும் போது உக்ரைன் மேலும் பல பகுதிகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பரேஷன் பைப்லைன் ஒரு முழுமையான சவாலாக உக்ரைனுக்கு மாறியது. ஏனெனில் உக்ரைனின் பல முக்கிய தளபதிகள் தப்பி ஓடிவிட்டனர். உக்ரைன் படைகளை கைவிட்டு, தாங்கள் பின்வாங்குவதை அவர்களுக்குத் தெரிவிக்கத் தவறிவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.
இந்த மார்ச் 12 அன்று, ரஷ்ய துணைப் பாதுகாப்பு அமைச்சரான இராணுவ ஜெனரல் வலேரி ஜெராசிமோவ், 800க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த நடவடிக்கையில் பங்கேற்றதாகக் கூறினார். எதிரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய, அவர்களைத் தங்கள் பாதுகாப்புகளைக் கைவிடச் செய்து, அதன் மூலம் கூர்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய இராணுவத்தின் முன்னேற்றத்திற்கு உதவிய ஒருங்கிணைந்த தாக்குதல் பிரிவின் வீரச் செயல்களை ஜெராசிமோவ் பாராட்டினார்.
உக்ரேனிய படைகள் பின்வாங்கல்:
ரஷ்யாவால் மீண்டும் கைப்பற்றப்பட்ட குடியேற்றங்களில் அக்ரோனோம், போக்டனோவ்கா, பொண்டரேவ்கா, டிமிட்ரியுகோவ், ஜசுலேவ்கா, இவாஷ்கோவ்ஸ்கி, கோல்மகோவ், குபாட்கின், மார்டினோவ்கா, மிகைலோவ்கா, பிராவ்டா மற்றும் யுஷ்னி ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் உக்ரேனிய கட்டுப்பாட்டில் உள்ள சுட்ஜா நகரத்தின் வடக்கு அல்லது கிழக்கே அமைந்துள்ளன. ஒரு வருடத்திற்கும் மேலாக, கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் பிராந்திய நகரமான அவ்தியிவ்காவுக்கான போரின் போது, ரஷ்ய துருப்புக்கள் இதுபோன்ற ஒரு சாதனையை நிகழ்த்தியதாக அறியப்படுகிறது. ஆரம்பத்தில் ரஷ்ய துருப்புக்கள் உக்ரேனிய பாதுகாப்பு வளையத்தை முறியடிக்க பல மாதங்கள் முயற்சித்தன.
2024 ஜனவரி தொடக்கத்தில், ரஷ்ய துருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கிய நீர் வெளியேறும் சுரங்கப்பாதையைப் பயன்படுத்தி நகரத்தின் தென்கிழக்கு மூலையில் ஊடுருவின. அங்கு உக்ரேனியப் படைகள் பதுங்கியிருந்து இந்த தாக்குதலை முறியடிக்க போராடின. தற்போதய குழாய் ஊடுருவலுக்கு முன்னர் பிப்ரவரி 17, 2024 அன்று, கூர்ஸ்க் சுற்றி வளைப்பதைத் தவிர்க்க உக்ரேனிய வீரர்கள் நகரத்திலிருந்து முழுமையாக பின்வாங்குவதாக அறிவித்தனர்.