பொழுதுபோக்கு
உடை மாற்றும் அறையில் உள்ளே நுழைந்த இயக்குனர்; தனுஷ் பட நடிகையின் கசப்பான அனுபவம்!

உடை மாற்றும் அறையில் உள்ளே நுழைந்த இயக்குனர்; தனுஷ் பட நடிகையின் கசப்பான அனுபவம்!
தெலுங்கில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. தென்னிந்திய சினிமாவில் பெரிய வெற்றியை பெற்ற இந்த படம், தமிழில், அர்ஜூன் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு துருவ் விக்ரம் நாயகனாக நடித்திருந்தார். அர்ஜூன் ரெட்டி படத்திற்கு பிறகு ஷாலினி பாண்டே, மெரி நிம்மோ என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார்.அதனைத் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கிய அவர், 2019-ம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான 100 சதவீதம் காதல் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தமிழில் நடிக்காத இவர், தற்போது தனுஷ் இயக்கி தயாரித்து நாயகனாக நடித்து வரும் இட்லி கடை என்ற படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கிரன், அருண் விஜய், பிரகாஷ்ராஜ், சமுத்திக்கனி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.விரைவில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை ஷாலினி பாண்டே தெலுங்கு திரையுலகில் தான் சந்தித்த மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், நான் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் நடித்து முடித்துவிட்டு ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடித்தேன். அப்போது எனக்கு 23 வயதே ஆனது.அந்த படத்தின் படப்பிடிப்பின்போது, நான் கேரவனில் உடை மாற்றிக் கொண்டு இருக்கும் போது அந்த படத்தின் இயக்குனர் கதவை தட்டாமலே உள்ளே நுழைந்தார். எனக்கு என்ன செய்வது என தெரியாமல் அவரை கண்மூடித்தனமாக திட்டினேன். அதன் பிறகுதான் இந்த திரைத்துறையில் என்னை காப்பாற்றிக் கொள்ள யார் யாருக்கு எந்த இடத்தை தரவேண்டும் என புரிந்தது. அதை நானே கற்றுக் கொண்டேன். நான் நல்ல மனிதர்கள் மற்றும் ஆண்களுடன் பணியாற்றியுள்ளேன். அதே சமயம் பல மோசமான மனிதர்களுடனும் பணியாற்றியுள்ளேன் என்று கூறியுள்ளார்.இந்தியில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற டப்பா கார்டல் வெப் தொடரில் நடித்திருந்த ஷாலினி பாண்டே, இந்தியில் தற்போது ரகுகேட்டு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் கடந்த ஆண்டு வெளியான மகாராஜ் படத்திற்காக ஐகானிக் கோல்டன் விருதை ஷாலினி பாண்டே வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.