விளையாட்டு
கோவா அணிக்கு தாவும் ஜெய்ஸ்வால்: திடீர் முடிவின் பின்னணி என்ன?

கோவா அணிக்கு தாவும் ஜெய்ஸ்வால்: திடீர் முடிவின் பின்னணி என்ன?
மும்பை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் கோவா அணியில் சேர இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு (எம்.சி.ஏ) அவர் அனுப்பியுள்ள இ-மெயிலில் அடுத்த சீசன் முதல் தனது கிரிக்கெட் மாநில அணியை மும்பையில் இருந்து கோவாவிற்கு மாற்றுவதற்கு தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி) வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் பேசுகையில், “யஷஸ்வி ஜெய்ஸ்வால் எங்களிடமிருந்து என்.ஓ.சி கோரியுள்ளார், மேலும் அவர் கோவாவிற்கு இடம்பெயர்ந்ததற்கான காரணத்தை தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டுள்ளார்,” என்று அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஜெய்ஸ்வாலுக்கு நெருக்கமானவர்களிடமும் பேசுகையில், அவர் மும்பையிலிருந்து கோவாவிற்கு செல்ல விரும்புவதாக அவர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். 23 வயதான ஜெய்ஸ்வாலின் இந்த நகர்வு மாநில கிரிக்கெட் வட்டாரத்தில் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், அந்த அணி ரஞ்சி டிராபி தொடரில் நாக்-அவுட் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. முன்னதாக அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சித்தேஷ் லாட் போன்ற வீரர்கள் மும்பை அணியில் இருந்து கோவா அணியில் சென்று சேர்ந்தனர். அவர்கள் வரிசையில் ஜெய்ஸ்வால் தற்போது இணைந்திருக்கிறார். இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று இந்திய வீரர்கள் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, கடந்த சீசனில் ஜெய்ஸ்வால் மும்பை அணிக்காக விளையாடினார். ஜம்மு-காஷ்மீருக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் அவர் மும்பை அணிக்காக 4 மற்றும் 26 ரன்கள் எடுத்தார்.இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்திய சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம் பெறாமல், பயணம் செய்யாத மாற்று வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஜெய்ஸ்வால், பிப்ரவரி 17 அன்று விதர்பாவுடன் அரையிறுதி மோதலுக்கு முன்னதாக மீண்டும் மும்பை ரஞ்சி அணியில் சேர்க்கப்பட்டார். இருப்பினும், கணுக்காலில் வலி ஏற்பட்டதால், ஆட்டத்திற்கு முந்தைய நாள் போட்டியில் இருந்து விலகினார்.19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் இருந்து ஜெய்ஸ்வால் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். சில சீசன்களுக்கு முன்பு விஜய் ஹசாரே டிராபியில் மும்பை அணிக்காக இரட்டை சதம் அடித்து அசத்தினார். உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியில் தன்னை தொடக்க வீரராக களமிறங்க உதவியது. 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான ஜெய்ஸ்வால், ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 43.44 சராசரியுடன் 391 ரன்கள் எடுத்து ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்கள் உட்பட எடுத்து கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.