விளையாட்டு
‘பிட்சை பஞ்சாப் அணி ஊழியர் தயாரித்தது போல் இருந்தது’: லக்னோ ஆலோசகர் ஜாகீர் கான் சரமாரி குற்றச்சாட்டு

‘பிட்சை பஞ்சாப் அணி ஊழியர் தயாரித்தது போல் இருந்தது’: லக்னோ ஆலோசகர் ஜாகீர் கான் சரமாரி குற்றச்சாட்டு
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் கடந்த 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7:30 மணிக்கு லக்னோவில் நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தோல்விக்கு பிட்ச் கியூரேட்டர், அதாவது ஆடுகளத்தை தயாரித்த பராமரிப்பாளரே காரணம் என்று அந்த அணியின் ஆலோசகர் ஜாகீர் கான் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக ஜாகீர் கான் பேசுகையில், “இது எங்களது சொந்த மைதானத்தில் நடந்த போட்டி போலவே இல்லை. இது சொந்த மைதானம் என்று சொல்லும் நிலையில் எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஐ.பி.எல் தொடரில் மற்ற அணிகள் சொந்த மைதானத்தில் சில சாதகங்களைப் பெறுகின்றன. ஆனால், இங்கு பிட்சை உருவாக்கிய ஊழியர் இது எங்களின் சொந்த மைதானம் என்பதைச் சிந்திக்காமல் செயல்பட்டது போல உள்ளது.பஞ்சாப் அணியின் பிட்ச் ஊழியர் இந்த பிட்சை தயாரித்தது போல உள்ளது. இது குறித்து நாங்கள் சீக்கிரம் ஒரு முடிவை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் நடக்கும் முதல் மற்றும் கடைசி போட்டியாக இது இருக்கும் என நம்புகிறேன். ஏனெனில், லக்னோ அணியின் ரசிகர்களும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இங்கே வந்தார்கள். முதல் சொந்த மைதானப் போட்டி என்ற ஆர்வத்துடன் இருந்தார்கள். அவர்களும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.ஒரு அணியாக, நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்த நாங்கள் ஆட்டத்தில் தோற்றுவிட்டோம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், மேலும் சொந்த மண்ணில் அந்த தாக்கத்தை ஏற்படுத்த நாங்கள் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இன்னும் ஆறு ஆட்டங்கள் மீதமுள்ளன, இந்த அணி இதுவரை சீசனில் காட்டியுள்ளபடி, எவ்வளவு சிறிய கிரிக்கெட் விளையாடினாலும், ஐ.பி.எல்-லைப் பார்க்க சரியான கண்ணோட்டமும் மனநிலையும் எங்களிடம் உள்ளது. இனிமேல் பிட்ச் ஊழியர் (கியூரேட்டர்) சொல்வதைப் பின்பற்றுவோம். இதை நாங்கள் சாக்காகப் பயன்படுத்த விரும்பவில்லை. கடந்த சீசனில் பேட்ஸ்மேன்கள் சில சமயங்களில் இங்கு போராட வேண்டியதில்லை என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். கிரிக்கெட்டில் இவை அனைத்தும் நடக்கும். ஆனால் சொந்த அணிக்கு ஆதரவு கிடைக்க வேண்டிய விதம், லக்னோவில் விளையாடும் எங்கள் சொந்த அணி இது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும், அவர்கள் வெற்றி பெற நாம் என்ன செய்ய முடியும்? அனைவரின் பங்களிப்பும் முக்கியம். அதனால், அடுத்த போட்டிகளில் வெற்றி பெற வழியைக் கண்டுபிடிப்போம்.” என்று அவர் கூறியுள்ளார்.