Connect with us

இந்தியா

புதுச்சேரியில் ரூ.1,800 கோடி அளவில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முறையாக செயல்படுத்தவில்லை – அ.தி.மு.க குற்றச்சாட்டு

Published

on

pdy anbazhagan

Loading

புதுச்சேரியில் ரூ.1,800 கோடி அளவில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முறையாக செயல்படுத்தவில்லை – அ.தி.மு.க குற்றச்சாட்டு

ரூ.1800 கோடி அளவிற்கு புதுச்சேரி நகரப்பகுதியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை செய்ய வேண்டிய அரசு, அந்த திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை.  அத்திட்டங்களை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகளின் தவறான முறைகேடான செயல்களால் குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போன்று இந்த திட்ட பணிகள் சின்னபின்னமாக ஆக்கப்பட்டுள்ளது என்று அ.தி.மு.க குறை கூறியுள்ளது.அ.தி.மு.க புதுச்சேரி மாநிலச் செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மத்திய அரசின் 50 சதவீத நிதி பங்களிப்புடன் சுமார் ரூ.1800 கோடி அளவிற்கு புதுச்சேரி நகரப்பகுதியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை செய்ய வேண்டிய அரசு, அந்த திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை.  அத்திட்டங்களை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகளின் தவறான முறைகேடான செயல்களால் குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போன்று இந்த திட்ட பணிகள் சின்னபின்னமாக ஆக்கப்பட்டுள்ளது.2017-ல் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட இந்த திட்டத்தை கடந்த கால திமுக காங்கிரஸ் ஆட்சியின் பொறுப்பற்ற செயலால்  இந்த திட்டம் முழுமையாக முடக்கப்பட்டது. தற்போதைய ஆட்சியாளர்கள் சுமார் ரூ.670 கோடி அளவில் சுமார் 89 திட்டங்களை செயல்படுத்த முடிவெடுத்து பல துறைகளுக்கும் அப்பணிகளை செய்ய அனுமதி அளித்தனர். அரசின் உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்து துறை, வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஸ்மார்ட் சிட்டி சம்பந்தமாக பணிகள் பிரித்து கொடுக்கப்பட்டது.பல்வேறு துறைகள் தங்களது விருப்பத்திற்கு தகுந்தார்போல் தேவையற்ற பல்வேறு பணிகளை செய்ய முன்வந்து அதில் பல முறைகேடுகளை செய்து மக்களுடைய பணத்தை வீணடித்துள்ளது கண்கூடான சாட்சியாகும். தற்போது அரவிந்தர் வீதியில் இருந்து திப்புராயப்பேட்டை முடிவு வரை கழிவுநீர் வாய்க்காலை மேம்படுத்தும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதில் நல்ல நிலையில் உள்ள 11 சிறிய பாலங்களை இடித்துவிட்டு அதே நிலையில் புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதற்காக ஸ்மார்ட் சிட்டி பணத்தில் இருந்து ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதே போன்று ஒருங்கிணைந்த கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையம் என்ற பெயரில் சுமார் ரூ.112 கோடி மதிப்பில் வருவாய் துறைக்கு இப்பணி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்பணியை செய்ய எடுத்துள்ள ஒப்பந்ததாரர் எவ்வித முன் அனுபவம் இல்லாத ஒப்பந்ததாரர் ஆவார். நகரப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமிரா பொருத்தும் பணிக்கு ரூ.100 கோடிக்கு மேல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த பணிக்கான ஒப்பந்த மதிப்பீடுகளை இறுதி செய்த அறிவாளி யார் என்று தெரியவில்லை. மக்களுடைய வரிப்பணம் ஏதோ ஒரு திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் வீணடிக்கப்படுவதை துணைநிலை ஆளுநர் அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறார் என்று தெரியவில்லை.குமரகுரு பள்ளம் அடுக்குமாடி குடியிருப்பு, அண்ணா திடல் புணரமைப்பு, புதிய பேருந்து நிலையம் புனரமைப்பு, ஒருங்கிணைந்த கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையம், பள்ளவாய்க்கால், மேட்டு வாய்க்கால்கள் புணரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் முடிவுற்ற வேலைகள் அதற்கான செலவு செய்யப்பட்டுள்ள தொகைகள் குறித்து ஒரு வரிவான விசாரணைக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், துணைநிலை ஆளுநர் அவர்களும் உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.ஸ்மார்ட் சிட்டி சம்பந்தமாக சட்டமன்றத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கருத்து தெரிவிக்கின்ற போது இந்த திட்டம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை என்று ஆதங்கத்தோடு குறிப்பிட்டார். ஏன் வெற்றி பெறவில்லை என அரசு இதன் மீது ஒரு விசாரணையை வைக்க வேண்டும்.மக்களுடைய வரிப்பணம் இத்திட்டத்தின் மூலம் வீணடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இருந்து வீணடிக்கப்பட்ட பணத்தை திரும்ப பெறுவதற்கு அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று அன்பழகன் கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன