இலங்கை
உண்மைப் பிரதிகள் உள்ள வேட்புமனுக்களை ஏற்குமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவு!

உண்மைப் பிரதிகள் உள்ள வேட்புமனுக்களை ஏற்குமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவு!
உள்ளூராட்சித் தேர்தலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில், ‘உண்மைப் பிரதிகள்’ உள்ள வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்று, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. சமர்ப்பணங்களைக் கேட்டறிந்த நீதிபதிகளான மொஹமட் லாபர் தாஹிர் மற்றும் கே.பி.பெர்ணாண்டோ, ஒருவருடைய பிறப்பின் போது மருத்துவமனையில் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழை ஆதாரமாக ஏற்க மறுத்திருந்தால், அவற்றை உரிய ஆதாரமாக ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது.
தென்னிலங்கையில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனு ஒன்று தொடர்பிலேயே இந்த வழிகாட்டலை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட இதர மனுக்கள் மீதான விசாரணை இன்று இடம்பெறவுள்ளது. இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு நாளை வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.