
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 03/04/2025 | Edited on 03/04/2025

வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிப்பில் இயக்குநர் வ.கௌதமன் நடிப்பில் உருவாகும் படம் ‘படையாண்ட மாவீரா’. இப்படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் கதை, திரைக்கதை எழுதி இயக்கவும் செய்கிறார் கௌதமன். கனவே கலையாதே, மகிழ்ச்சி ஆகிய படங்களை தொடர்ந்து இப்படத்தில் கௌதமன் நாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திங்களாக சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, இளவரசு, தமிழ் கெளதமன், தலைவாசல் விஜய், ஏ.எல். அழகப்பன் ஆகியோர் நடிக்கின்றனர். நாயகியாக பூஜிதா நடிக்கிறார். இசையை ஜிவி.பிரகாஷ் குமாரும், பாடல்களை வைரமுத்துவும் வழங்கியுள்ளனர். இப்படம் மண்ணையும் மானத்தையும் காக்க வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் ஐந்தாவது பாடல் குறித்து வைரமுத்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “கௌதமன் இயக்கும் புரட்சிப் படம் படையாண்ட மாவீரா, அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு பாடலையும் வந்து வாங்கிச் செல்வார்; வாசித்து வழங்கச் சொல்வார். இந்தப் பாடலை வாசிக்கும் பொழுது குளமான கண்களோடு கும்பிட்டுக்கொண்டே எழுந்தார். அவர் கைகளில் பாட்டுத்தாளை ஒப்படைத்தேன். நல்ல ரசிகனுக்கு நல்ல பாடல் அமையும்” என குறிப்பிட்டிருக்கிறார்.