விளையாட்டு
சொந்த மைதானத்தில் மண்ணைக் கவ்விய ஆர்.சி.பி… பழைய அணிக்கு பாடம் புகட்டிய சிராஜ்!

சொந்த மைதானத்தில் மண்ணைக் கவ்விய ஆர்.சி.பி… பழைய அணிக்கு பாடம் புகட்டிய சிராஜ்!
விநாயக் மோகன்ரங்கன் – Vinayakk Mohanaranganஐ.பி.எல் 2025 தொடரை பாசிடிவ் வைப் உடன் தொடங்கியது ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஏனெனில், அந்த அணியினர் முதல் இரண்டு போட்டிகளை கடினமான சூழல் நிறைந்த எதிரணியின் மண்ணில் ஆடின. அந்த சாவல்களை சமாளித்த அவர்கள், முதலில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை (கே.கே.ஆர்) கொல்கத்தாவிலும், அடுத்து 17 வருட காத்திருப்புக்குப் பின் சென்னனை சூப்பர் கிங்ஸ் அணியை அதன் கோட்டை வைத்தும் வீழ்த்தினர். இதன் மூலம், புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து வெற்றி நடைபோட்டனர். ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025: Mohammed Siraj shows old team RCB what they are missingஇதற்கு அடுத்து, பெங்களூரு அணியினர் அவர்களின் சொந்த மண்ணில் ஆடும் போட்டிக்கான எதிர்பார்ப்பு எகிறியது. அவ்வகையில், நேற்று புதன்கிழமை குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்ட அவர்கள், 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தால் தோற்கடிக்கப்பட்டு, மீண்டும் பழைய அவர்களுக்கு பழக்கமான சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளனர். சிராஜின் மறக்கமுடியாத கம்பேக் முகமது சிராஜ் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் விளையாடி தனது சொந்த அணிக்கு எதிராக இம்முறை களமிறங்கி இருந்தார். அவரை அவரது முன்னாள் அணி வீரர்கள் களத்தில் கட்டியணைத்து வரவேற்றனர். முன்னதாக, பெங்களூரு அணியில் இருந்து குஜராத் அணிக்கு சென்றபோது சிராஜ் நெகிழ்ச்சி மிக்க பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருந்தார். அதில் “ஆர்.சி.பி-க்கு எப்போதும் என் இதயத்தின் ஒரு பகுதி இருக்கும்.” என்று குறிப்பிட்டு இருந்தார். இருப்பினும், நேற்று அவர் தனது பழைய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தார். பவர்பிளேயில் பவுலிங்கில் மிரட்டினார். சொல்லப்போனால் அவர் தனது முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருக்க வேண்டும். அந்த ஓவரில் ஆர்.சி.பி-யின் தொடக்க வீரர் பில் சால்ட் அடித்த பந்தின் கேட்சை கோட்டை விட்டிருந்தார் குஜராத் கீப்பர் பட்லர். இருப்பினும், தனது துல்லியமான வேகத்தால் குடைச்சல் கொடுத்த சிராஜ் தேவ்தத் படிக்கல் விக்கெட் கைப்பற்றி அசத்தினார். கால்பந்தில் நாம் காண்பது போல, முன்னாள் அணிகளுக்கு எதிராக வீரர்கள் கோல் அடிக்கும்போது, அதனை அந்த வீரர் கொண்டாடமல் இருப்பார்கள். ஆனால், சிராஜ் ரொனால்டோ (CR7) போல் தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். அப்படி கொண்டாடிய சில நிமிடங்கள் கழித்து, சால்ட் விக்கெட்டை வீழ்த்தி அதேபோன்று அவர் மீண்டும் செய்தார். சிராஜ் வீசிய பந்தில் சால்ட் 105 மீட்டருக்கு சிக்ஸர் பறக்கவிட்ட நிலையில், அடுத்த பந்தை அவர் கிராஸ்-சீம் ஆக போட்டு சால்ட்-டுக்கு பின்புறம் இருந்த ஆஃப்ஸ்டம்பை சிதறடிக்கச் செய்தார். பின்னர் தனது இறுதி ஓவரை வீச திரும்பி வந்த அவர், லியாம் லிவிங்ஸ்டோனை அடித்த பந்தில் கீப்பர் கேட்ச் எடுக்க வைத்து, அந்த அணிக்காக அதிக ரன் எடுத்தவரை பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். இப்படி தனது பழைய அணிக்கு எதிராக பந்து வீச்சில் மிரட்டி எடுத்த அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. சாய் கிஷோரின் சிறப்பான தொடக்கம்ஐ.பி.எல்-லில் மூன்று சீசன்களில் 13 போட்டிகளில் மட்டுமே சாய் கிஷோர் விளையாடியுள்ளார் என்பது விசித்திரமான பழைய கதை. இந்திய உள்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் அவரது திறமைகளுக்கு உறுதியளித்திருக்கிறார்கள். அவர் நாட்டின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார், ஆனால் அது ஐ.பி.எல்-லில் வெற்றியாக மாறவில்லை. ஆனால், நடப்பு தொடரில் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றிருக்கிறார் தமிழகத்தின் சாய் கிஷோர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பான சுழல் வித்தை காட்டி வரும் அவர் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 30 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டை எடுத்தார். அதாவது, ஒரு ஓவருக்கு 7.50 ரன்கள் என்கிற கணக்கில் விட்டுக்கொடுத்தார். அந்தப் போட்டியில் இரு அணிகளிலும் 9 ரன்களுக்குக் கீழே விட்டுக் கொடுத்த ஒரே பந்து வீச்சாளர் சாய் கிஷோர். அதே ஃபார்மை நேற்றைய போட்டியிலும் தொடர்ந்திருந்த அவர் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள், அதாவது ஒரு ஓவருக்கு 5.50 ரன்கள் வீதம் விட்டுக் கொடுத்து ஜிதேஷ் சர்மா மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இந்த இரண்டு விக்கெட்டை எடுத்த பந்துகளும் அவர் எவ்வளவு சாதுர்யமானவர் என்பதற்கான நிரூபணங்களாக இருந்தன. ஜிதேஷுக்கு, முந்தைய ஓவரில் ஒரு பவுண்டரியை எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடித்த பிறகு, சாய் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்திருந்தார். அவர் ஓவர் தி விக்கெட் வந்து பவுலிங் போட்டார். அந்த மாற்றம் உடனடியாக வேலை செய்தது. பந்தை அவுட்-சைடு ஆப் திசை போட, பந்து சிறிது தாமதமான திருப்பத்தைக் கொடுத்தது. அதனை தூக்கி விளாச நினைத்த ஜிதேஷ் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். க்ருணால் பாண்டியாவுக்கு, சாய் கேரம் பந்தை போட, பந்து சாய்ந்து நகர்ந்து, பிட்ச் செய்த பிறகு நேராகி, இடது கை பேட்டரை முற்றிலுமாக ஏமாற்றியது. மேலும், பந்து பேட்டின் முன்பக்கமாக எட்ஜ் அடிக்க அங்கே ஆடுகளத்தில் நின்ற சாய் வந்த கேட்சை லாவகமாக பிடித்து அசத்தினார். இந்த போட்டிக்குப் பின்பு பேசிய அவரது அணி வீரர் பிரசித் கிருஷ்ணா, சாய் அணியின் இதயத்துடிப்பு என்று கூறினார். மேலும் அவர் இப்போது தனது வாய்ப்புகளில் அந்த நிலைத்தன்மையை வெளிப்படுத்தி வருகிறார் என்றும் குறிப்பிட்டார். மற்றொரு நேர்காணலில் பேசிய சாய் “இந்த வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் நன்றாக உணர்ந்தேன். இந்த நிலையில் இருக்க நான் கடுமையாக உழைத்தேன். லீக்கில் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக நான் உண்மையில் உணர்கிறேன். நான் இன்னும் அதிக ஆட்டங்களை விளையாடி அதை மேலும் நிலைநிறுத்த வேண்டும்.” என்று அவர் கூறினார். தவறுகளை சரிசெய்த பட்லர் இந்த போட்டிக்குப் பிந்தைய உரையாடலில் பேசிய குஜராத் கீப்பரும், அணியின் வெற்றிக்கு 73 ரன்கள் எடுத்து உதவிய ஜோஸ் பட்லர், சால்ட் கேட்சை தவறவிட்டது பற்றி கூறுகையில், “அது மிகவும் சங்கடமாக இருந்தது” என்று குறிப்பிட்டார். மேலும் 1999 உலகக் கோப்பையில் ஹெர்ஷல் கிப்ஸ் செய்த அந்த மோசமான தவறை குறிப்பிட்டார். “எனது கையுறையில் பந்து வரவில்லை. அது என் மார்பில் பட்டது, ஆனால் அந்த சங்கடத்தின் காரணமாக, சில ரன்கள் எடுக்க முயற்சிக்க நான் மிகவும் உறுதியாக இருந்தேன்.” என்று கூறினார். ஆனாலும், இந்தப் போட்டியில் லிவிங்ஸ்டோனின் ஸ்டம்பிங் வாய்ப்பையும் பட்லர் தவறவிட்டார். எனினும், தனது அதிரடி பேட்டிங் மூலம் தனது தவறுகளை சரிசெய்தார். அவரது பேட்டிங் நிலை குறித்து சில விவாதங்கள் நடந்துள்ளன, ஆனால், சுப்மன் கில் மற்றும் பி சாய் சுதர்சனுடன் வலது-இடது காம்போவை மேலே வைத்திருக்க அவர் விரும்பினார். மேலும், குஜராத் அணிக்காக 3வது இடத்தில் ஆடி சிறப்பான சேஸிங் கொடுக்கும் முடிவை எடுத்தார். தனது பேட்டிங்கில் பல கியர்களைக் கொண்டுள்ள அவர், குறைந்த அளவில் ரிஸ்க் எடுத்து மட்டையைச் சுழற்ற தொடங்கினார். ஆனால், ராசிக் தார் சலாம் ஓவரில் வெளுத்து வாங்கினார். மேலும், இம்பேக் வீரராக வந்த ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்டை அழுத்தத்தில் வைக்கும் வாய்ப்பை உணர்ந்த அவர், ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு எதிராக அபாரமான ஆடினார். அணி வெற்றி இலக்கை எட்டிப் பிடித்த நிலையில், 187 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆட்டத்தை முடித்து, ஆட்டமிழக்காமல் இருந்தார்.