இலங்கை
திருட்டுபோன அதிசய சிலை கைவிடப்பட்ட நிலையில் மீட்பு

திருட்டுபோன அதிசய சிலை கைவிடப்பட்ட நிலையில் மீட்பு
திருட்டுபோன கம்பஹா – கந்தானை புனித செபஸ்தியார் திருத்தலத்தில் இனந்தெரியாத நபர் ஒருவரால் திருடப்பட்ட அதிசய செபஸ்தியார் சிலை ஆரம்ப பாடசாலையின் கூரையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை கந்தானை புனித செபஸ்தியார் திருத்தலத்தில் திருத்தலத்தில் வைக்கப்பட்டிருந்த புதுமையான செபஸ்தியாரின் திருவுருவச்சிலை இனந்தெரியாத நபர் ஒருவரால் திருடிச்செல்லப்பட்டது.
திருத்தலத்தினுள் நுழைந்த நபர் ஒருவரால் சிலை திருடிசெல்லப்பட்டமை திருத்தலத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.ரி.வி. கமராவில் பதிவாகியிருந்தது.
தகவலறிந்த பொலிஸார் பிரதேசவாசிகளுடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, திருத்தலத்துக்குச் சொந்தமான அருகிலிருந்த ஆரம்ப பாடசாலையின் கூரையில் சாக்கு பையில் சுற்றப்பட்ட நிலையில் சிலை கண்டெடுக்கப்பட்டது.
எனினும் சந்தேகநபர் செபஸ்தியாரின் திருவுருவச்சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கத்தாலான கிரீடம், அம்புகள் மற்றும் நகைகள் ஆகிய பெறுமதிமிக்க ஆபரணங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சிலை 1848 ஆம் ஆண்டு கந்தானை புனித செபஸ்தியார் திருத்தலத்துக்கு வழங்கப்பட்டதுடன், மீள செபஸ்தியாரின் திருவுருவச்சிலை திருத்தளத்தில் ஸ்தாபிக்கப்பட்டு சிறப்பு ஆசீர்வாத தேவாராதனை ஒன்றும் இடம்பெற்றிருந்தது.
மேலும் சிலை திருட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.