
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 03/04/2025 | Edited on 03/04/2025

ஹன்சிகாவின் சகோதரரான பிரசாந்த் 2020ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகை முஸ்கானை திருமணம் செய்தார். பின்பு 2022ஆம் ஆண்டு பிரிந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதையடுத்து முஸ்கான், பிரசாந்த், ஹன்சிகா மற்றும் அவரது தாயார் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், பிரசாந்த் தன் மீது வன்முறையில் ஈடுபட்டதாகவும் ஹன்சிகா மற்றும் அவரது தாயார் தன்னுடைய திருமண உறவில் தலையிட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் மூவரும் விலையுயர்ந்த பரிசுகள் மற்றும் பணத்தைக் கேட்பதாகவும் சொத்து சம்பந்தப்பட்ட மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறியிருந்தார்.
முஸ்கானின் புகாரின் அடிப்படையில் மும்பையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் ஹன்சிகா, அவரது சகோதரர் பிரசாந்த் மற்றும் தாயார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் இருந்து ஹன்சிகாவும் அவரது தாயாரும் கடந்த பிப்ரவரி மாதம் மும்பை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர். இதைத் தொடர்ந்து தாயும் மகளும் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் முஸ்கா சொன்ன அனைத்து குற்றச்சாட்டுகளை மறுத்து குறிப்பிட்டிருந்தார்.
மேலும் முஸ்கானுக்கும் தனது சகோதரனுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு 2021 முதல் நடந்து வருவதாகவும், ஆனால் 2022-ல் பரஸ்பர விவாகரத்து பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மனு குறித்து மும்பை காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியது. பின்பு வழக்கு விசாரணையை ஜூலை 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.