விளையாட்டு
ஐ.பி.எல் வரலாற்றில் முதல்முறை… திலக் வர்மா ‘ரிட்டயர்டு அவுட்’ குறித்து ஜெயவர்தனே விளக்கம்

ஐ.பி.எல் வரலாற்றில் முதல்முறை… திலக் வர்மா ‘ரிட்டயர்டு அவுட்’ குறித்து ஜெயவர்தனே விளக்கம்
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு லக்னோவில் நடைபெற்ற 16-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை பவுலிங் போட்டது. அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 203 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிரடியாக ஆடி அரைசதம் விளாசிய மிட்செல் மார்ஷ் அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 204 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய மும்பை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 12 ரன் வித்தியாசத்தில் லக்னோ திரில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 67 ரன் எடுத்தார். இந்நிலையில், லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வீரர் திலக் வர்மா ரன்கள் எடுக்க மிகவும் சிரமப்பட்டார். இதன் காரணமாக அவர் 23 பந்தில் 25 ரன் எடுத்திருந்த போது ‘ரிட்டயர்டு அவுட்’ ஆகி வெளியேறினார். இந்த முடிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், திலக் வர்மா ‘ரிட்டயர்டு அவுட்’ ஆகி வெளியேறியது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தனே பேசுகையில், “திலக் வர்மா சூரியகுமாருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக ஆடினார். போட்டியை அவரே முடிக்க வேண்டும் என நினைத்தார். அதற்காக இறுதி ஓவர் வரை ஆட முற்பட்டார். ஆனால், அவர் சிரமத்துக்கு உள்ளாகும் போது, வேறு ஒருவர் புதிதாக விளையாட வேண்டும் என எனக்கு தோன்றியது. கிரிக்கெட்டில் இது எப்போதும் நிகழும் ஒன்றுதான். அவரை வெளியேற்றுவது சரியில்ல. ஆனால், அதனை நாங்கள் செய்ய வேண்டியிருந்தது. அப்போது அது சமயோஜிதமாக தோன்றியது.” என்று அவர் கூறியுள்ளார். முன்னதாக, லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு பேசிய கேப்டன் ஹர்திக், “திலக் வர்மா ஆட்டத்தின் இறுதியில் வெளியேறியது குறித்து கேட்கிறீர்கள். எங்களுக்கு இறுதியில் பெரிய ஷாட்கள் தேவைப்பட்டது. கிரிக்கெட்டில் இதுபோன்று சில நாட்கள் வரும் நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அது நடக்காது. நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும். நான் அதை எளிமையாக வைத்திருக்க விரும்புகிறேன்.சிறந்த முடிவுகளை எடுங்கள், பந்துவீச்சில் புத்திசாலித்தனமாக இருங்கள் பேட்டிங்கில் வாய்ப்புகளை எடுங்கள். இது ஒரு நீண்ட தொடர் இன்னும் இரண்டு வெற்றிகள் கிடைத்தால் நாங்கள் முன்னேற முடியும்.” என்று கூறியிருந்தார். ஐ.பி.எல் வரலாற்றில் முதல்முறை ஐ.பி.எல் வரலாற்றில் ‘ரிட்டயர்டு அவுட்’ முறையில் களத்தில் இருந்து வெளியேறிய முதல் வீரர் ஆகியிருக்கிறார் திலக் வர்மா. ரிட்டயர்டு அவுட் என்பது, ஒரு வீரர் காயம் ஏதுவும் இன்றி தானாக முன்வந்து அவுட் ஆவதாக அறிவிப்பது ரிட்டயர்டு அவுட் ஆகும். இதனை ஐ.பி.எல்-லில் செய்ய முதல் வீரர் ஆகியுள்ளார் திலக் வர்மா.