இந்தியா
பணி நிரந்தரம் கோரி 4-வது நாளாக போராட்டம்: அடுத்தடுத்து மயங்கி விழுந்த ஆசிரியர்கள்; புதுச்சேரியில் பரபரப்பு

பணி நிரந்தரம் கோரி 4-வது நாளாக போராட்டம்: அடுத்தடுத்து மயங்கி விழுந்த ஆசிரியர்கள்; புதுச்சேரியில் பரபரப்பு
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த ஆசிரியர்களில் ஐந்து பேர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் கடந்த 2020 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கல்வித்துறையில் 288 பேர் ஒப்பந்த ஆசிரியர்களாக பணி அமர்த்தபட்டனர். அவர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஓப்பந்த ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாய தெரிவித்திருந்தார். இதனிடையே, கடந்த வாரம் அவர்களுக்கு இந்த கல்வியாண்டுக்கு அவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சடைந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த நான்கு நாட்களாக இரவு-பகல் என சட்டப்பேரவை அருகே அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில், இன்று ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடுமாறு, கலைந்து போக செய்ய வலியுறுத்தியும் காவல்துறையினர் வற்புறுத்தினர். இதனால் இரு தரப்பிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஐந்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்கள் மயக்கமடைந்த ஆசிரியர்களை தூக்கிக்கொண்டு சென்று அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர்.இதுகுறித்து தகவல் அறிந்த காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க கட்சித் தலைவர்கள் போராட்டக் களத்திற்கு நேரடியாக வந்து ஆசிரியர்களுக்கு ஆதரவு அளித்து போலீசார் உடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் சட்டப்பேரவை அருகே பதட்டமான சூழல் நிலவியது.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.