வணிகம்
பெண் அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகை: குடும்ப ஓய்வூதியத்திற்கு கணவருக்கு பதிலாக குழந்தைகளை பரிந்துரைக்கலாம்

பெண் அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகை: குடும்ப ஓய்வூதியத்திற்கு கணவருக்கு பதிலாக குழந்தைகளை பரிந்துரைக்கலாம்
பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, சில சந்தர்ப்பங்களில் பெண் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் கணவருக்கு பதிலாக குழந்தைகளை குடும்ப ஓய்வூதியத்திற்கு பரிந்துரைக்கலாம்.பெண் ஊழியர்கள் விவாகரத்து பெற்றிருந்தால் அவரது கணவருக்கு பதிலாக குடும்ப ஓய்வூதியத்தை பெற அப்பெண் தனது குழந்தையை பரிந்துரைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், சம்பந்தப்பட்ட பெண், தனது கணவரால் குடும்ப வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்திருந்தால் அல்லது கணவர் மீது வரதட்சணை வழக்கு பதிவு செய்திருந்தால் அல்லது வேறு ஏதேனும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தாலும் அப்பெண்ணின் குடும்ப ஓய்வூதியத்தை பெற குழந்தையை பரிந்துரைக்கலாம்.இந்த உத்தரவு குறிப்பாக விவாகரத்தில் இருக்கும் பெண்களுக்கு அல்லது குடும்ப வன்முறை, வரதட்சணை துன்புறுத்தல் அல்லது பிற சட்டப் பிரிவுகளின் கீழ் கணவர் மீது வழக்குப் பதிவு செய்த பெண்களுக்கு நிவாரணம் அளித்துள்ளது. இப்போது அத்தகைய பெண்கள், தங்கள் கணவனை குடும்ப ஓய்வூதியத்தின் முதன்மைப் பயனாளியாக்காமல் நேரடியாக தங்கள் குழந்தைகளை உரிமையாக்க முடியும்.ஜனவரி 1, 2024 அன்று ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை (DoP&PW) மூலம் மற்ற அரசு ஊழியர்களுக்கு இந்த ஏற்பாடு ஏற்கனவே செயல்படுத்தப்பட்டது. இப்போது இந்த வசதி அகில இந்திய சேவைகளின் பெண் அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் இந்த முடிவு திருமண துன்புறுத்தல் அல்லது சட்டப் போராட்டத்தை எதிர்கொள்ளும் பெண் ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும். இந்த நடவடிக்கை, அரசு பணியில் இருக்கும் பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகளின் பாதுகாப்பு, உரிமைகளை தீவிரமாக எடுத்துக் கொள்கிறது. மேலும், கடினமான காலங்களில் அவர்களுக்கு ஆதரவளிப்பதில் உறுதி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.