விளையாட்டு
‘டக்-அவுட்டிடம் ஆலோசனை கேட்காத ஒரே நபர் தோனி தான்’: ரிக்கி பாண்டிங் பேட்டி

‘டக்-அவுட்டிடம் ஆலோசனை கேட்காத ஒரே நபர் தோனி தான்’: ரிக்கி பாண்டிங் பேட்டி
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், தி இந்தியன் எக்ஸ்பிரஸின் ஐடியா எக்ஸ்சேஞ் நிகழச்சியில் கலந்து கொண்டார். அதில் அவர் ஐ.பி.எல்-லில் ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து பணியாற்றுவது, அணியை அடித்தளத்திலிருந்து உருவாக்குவது, சர்வதேச அளவில் ஐ.பி.எல் போட்டியின் நிலை குறித்து பேசி இருந்தார். இதனை தி இந்தியன் எக்ஸ்பிரஸின் மூத்த உதவி ஆசிரியர் விநாயக் மோகனரங்கன் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்வில் ரிக்கி பாண்டிங் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ் தோனி குறித்து பேசியுள்ளார். ஐ.பி.எல். தொடரில் டக்-அவுட்டிடம் ஆலோசனை கேட்காத ஒரே ஆள் தோனிதான் என்று அவர் கூறியுள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்: Ricky Ponting at Idea Exchange: ‘Dhoni may be the only one in IPL who doesn’t seek advice from the dugout ’ரிக்கி பாண்டிங்-யிடம், டாஸ் போட்ட பிறகும் களத்தில் இருக்கும் அனுபமுள்ள அல்லது அனுபவமற்ற கேப்டனிடம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என அடிக்கடி ஆலோசனை சொல்லப்படுவதைப் பார்க்கும் போது, கால்பந்து மேலாளர் போல், கிரிக்கெட்டிலும் கேப்டன்கள் தனித்து செயல்படுவதில் ஏதேனும் தவறு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நிச்சயமாக இல்லை. களத்தில் இருக்கும் ஒரு கேப்டன் டக்-அவுட்டிடம் ஆலோசனை கேட்காதது அரிது. ஐ.பி.எல்-லில் அப்படிச் செய்யாத ஒரே நபர் தோனியாக இருக்கலாம். எங்கள் முதல் ஆட்டத்தில் கூட, ஷ்ரேயாஸிடம் நிறைய ஆலோசனைகள் சென்றன. மேலும் அவர் ஆட்டத்திற்கு என்ன தேவை என்று கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். முதல் ஆட்டத்தில் வைஷாக் விஜய்குமார் தாமதமாக வந்தார். அதனால், எங்கள் இம்பேக்ட் வீரரை நாங்கள் எவ்வாறு பயன்படுத்தினோம் என்பது ஒரு சிறந்த உதாரணம். அதற்குப் பின்னால் நிறைய தந்திரோபாய திட்டமிடல் இருந்தது. எங்களிடம் மூன்று பேர் தயாராக இருந்தனர்: இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வைஷாக். எங்கள் இம்பேக்ட் வீரரை விளையாடுவதற்கு சரியான நேரத்திற்காக நாங்கள் காத்திருந்தோம். அது குஜராத் டைட்டன்ஸ் என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. அவர்களின் டக்அவுட்டை நாங்கள் கண்காணித்து, அவர்கள் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டை அல்லது க்ளென் பிலிப்ஸை தங்கள் இம்பேக்ட் வீரராகப் பயன்படுத்துவார்களா என்று காத்திருந்தோம். அவர்கள் தங்கள் தேர்வை எடுத்தவுடன், நாங்கள் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஐ.பி.எல்-லில் டைம்அவுட்கள் இருந்தாலும், உங்கள் கேப்டன் அல்லது மூத்த வீரர்களுடன் பேச உங்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது.” என்று ரிக்கி பாண்டிங் கூறினார்.