பொழுதுபோக்கு
திடீர் உடல் நலக்குறைவு: தயாரிப்பாளர் ராமநாதன் மரணம்; திரையுலகினர் இரங்கல்!

திடீர் உடல் நலக்குறைவு: தயாரிப்பாளர் ராமநாதன் மரணம்; திரையுலகினர் இரங்கல்!
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருந்தவர் ராமநாதன். பல ஆண்டுகளாக நடிகர் சத்யராஜூவுடன் மேலாளராக பணியாற்றிய இவர், சத்யராஜ் நடிப்பில் வெளியான வாத்தியார் வீட்டு பிள்ளை, வள்ளல், நடிகன், திருமதி பழனிச்சாமி, பிரம்மா, வில்லாதி வில்லன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.இதில் சத்யராஜ் இயக்கி நாயகனாக நடித்த வில்லாதி வில்லன் திரைப்படம் அவரின் 100-வது திரைப்படமாகும். இந்த படத்தில் வழக்கறிஞர், வில்லன், புரட்சிக்காரன் என 3 கேரக்டரில் நடித்திருந்த சத்யராஜ் தனது 100-வது படத்தை இயக்கி பெரிய வெற்றியை பெற்றிருந்தார். இந்த படத்தையும் அவரது மேலாளரான ராமநாதனே தயாரித்திருந்தார்.அதேபோல் பாரதிராஜா இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த தமிழ்ச்செல்வன் படத்தையும் தயாரித்திருந்த தயாரிப்பாளர் ராமநாதன், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவர் மரணமடைந்தார். 72 வயதாகும் ராமநாதனுக்கு, பிரமிளா என்ற மனைவியும், காருண்யா, சரண்யா என இரு மகள்களும் உள்ளனர்.மகள்கள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்கள் சென்னை திரும்பியதும், நாளை மறுநாள் ராமநாதனின் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ராமநாதன் மறைவுக்கு, ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.