விளையாட்டு
இனி சி.எஸ்.கே மேட்ச் பத்தி பேச மாட்டோம்: அஸ்வின் எடுத்த இந்த முடிவுக்கு காரணம் என்ன?

இனி சி.எஸ்.கே மேட்ச் பத்தி பேச மாட்டோம்: அஸ்வின் எடுத்த இந்த முடிவுக்கு காரணம் என்ன?
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு சண்டிகர் மாநிலம் முல்லன்பூரில் நடக்கும் 22-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை ஆடிய 4 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, மூன்றில் தோல்வி என பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. அந்த அணி அடுத்த கட்டத்திற்கு முன்னேற இன்றைய போட்டியில் வெற்றியை ருசிக்க வேண்டியவது அவசியமான ஒன்றாகும். இந்நிலையில், இந்த சீசனில் ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் சேனல் இனி சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி மூத்த சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் தற்போது மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்த சூழலில், சி.எஸ்.கே சம்பந்தப்பட்ட ஆட்டங்கள் குறித்து போட்டிக்கு முன்னும், போட்டிக்கு பின்னும் விவாதிக்கப் போவதில்லை எனக் கூறப்பட்டது. இதற்கு காரணம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, அஸ்வினின் யூடியூப் சேனலில் பேசிய தென் ஆப்பிரிக்கா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கான முன்னாள் தரவு ஆய்வாளரான பிரசன்னா அகோரம், ”ஏற்கெனவே அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா அணியில் இருக்கும்போது சி.எஸ்.கே-வில் நூர் அகமதுவை சேர்த்தது தவறு. இவருக்கு பதிலாக வேறு ஒரு பேட்ஸ்மேனை எடுத்திருக்கலாம்” என்று கருத்து தெரிவித்தார். சென்னை அணிக்காக சிறப்பாக பந்துவீசி வரும் நூர் அகமது நடப்பு ஐ.பி.எல் தொடரில் 10 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ள நிலையில், அவரை எடுத்தது தவறு என்று பேசிய பிரசன்னாவை ரசிகர்கள் பலரும் சமூக வலைதள பக்கங்களில் வைத்து வறுத்து எடுத்தனர். மேலும், அஸ்வின் சி.எஸ்.கே வீரராக இருக்கும் நிலையில், அவருக்கு ஆதரவாகவும், சி.எஸ்.கே-வுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருவதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில், சி.எஸ்.கே குறித்து இனி ஏதும் பேச மாட்டோம் என அஸ்வினின் யூடியூப் சேனல் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அஸ்வின் யூடியூப் சேனலின் நிர்வாகி கூறுகையில், “கடந்த வாரத்தில் இந்த மன்றத்தில் நடந்த விவாதங்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு, நாங்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள விரும்புகிறோம். இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் சிஎஸ்கே அணி குறித்து முன்னோட்டங்கள் மற்றும் மதிப்புரைகளில் இருந்து விலகி இருக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.எங்கள் நிகழ்ச்சிகளில் வரும் பல்வேறு கண்ணோட்டங்களை நாங்கள் மதிக்கிறோம். மேலும் போட்டிகள் குறித்த உரையாடல் நாங்கள் நிறுவிய தளத்தின் நேர்மை மற்றும் நோக்கத்திற்கு உண்மையாக இருப்பதை உறுதி செய்வதில் உறுதியாக இருக்கிறோம். எங்கள் சேனலில் விருந்தினர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் அஷ்வினின் தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை” என்று கூறியுள்ளார். அஸ்வின் யூடியூப் பக்கத்திற்கு 1.6 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். இதேபோல், அவர் இந்தி பகுப்பாய்வில் கவனம் செலுத்தும் ஆஷ் கி பாத் என்ற புதிய சேனலையும் தொடங்கி இருக்கிறார்.