இலங்கை
கொழும்பு மாநகரசபை உட்பட 6 சபைகளின் தேர்தலுக்கு நீதிமன்றால் தடை விதிப்பு!

கொழும்பு மாநகரசபை உட்பட 6 சபைகளின் தேர்தலுக்கு நீதிமன்றால் தடை விதிப்பு!
கொழும்பு மாநகரசபை உட்பட ஆறு உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை மே மாதம் 16ஆம் திகதி வரை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு மாநகரசபைக்கு மேலதிகமாக குளியாப்பிட்டிய, ஹரிஸ்பத்துவ, உடபளாத்த, பன்வில மற்றும் பாத்ததும்பர பிரதேச சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுக்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்ததால் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பாகவும், ஆவணப் பற்றாக்குறை தொடர்பில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் பரிசீலித்த பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த மனுமீதான விசாரணை மே மாதம் 16ஆம் திகதிக்குத் தவணையிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் மே மாதம் 6ஆம் திகதி என்பதால், மேற்படி ஆறு சபைகளுக்கும் தேர்தலை நடத்தும் நிலைமை இயல்பாகவே இல்லாமற் போயுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு சட்டப்போராட்டத்தை நடத்துவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.