இந்தியா
போலி கால் சென்டர்; பல கோடி அபேஸ்: ஹரியானாவைச் சேர்ந்த 2 பேர் புதுச்சேரில் கைது

போலி கால் சென்டர்; பல கோடி அபேஸ்: ஹரியானாவைச் சேர்ந்த 2 பேர் புதுச்சேரில் கைது
புதுச்சேரியைச் சேர்ந்த சிவனேஷ் வேலைவாய்ப்பிற்காக பல்வேறு இணையதளங்களில் பதிவு செய்துள்ளார். இதையடுத்து அவருடைய மொபைல் எண்ணிற்கு, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நபர் தன்னை எச்.ஆர் என அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார். மேலும், அக்சென்ச்சர் என்ற ஐ.டி நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார். இதன்பின்னர், சிவனேஷ்டம், தேர்வு கட்டணம், செயலாக்க கட்டணம் போன்ற பல்வேறு கட்டணங்களை டெபாசிட் செய்யுமாறு கூறியிருக்கிறார். இதை நம்பி சிவனேஷ் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூபாய் 1,73,994 பணத்தை பல்வேறு தவணைகளாக குற்றவாளியின் வங்கி கணக்கிற்கு செலுத்தியுள்ளார். அதன்பிறகு சிவனேஷ் அவர்களை பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், தொடர்புகொள்ள இயலவில்லை. இது தொடர்பாக சிவனேஷ் புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் கடந்த 14.09.2024 அன்று புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் சம்பந்தமாக இணையவழி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைத்தானியா மற்றும் இணைய வழி காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் ஆகியோரின் உத்தரவின் பேரில் இணையவழி குற்றப்பிரிவு ஆய்வாளர் தியாகராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில், குற்றவாளிகளின் மொபைல் எண்கள் மற்றும் வங்கி கணக்குகளை பரிசோதித்ததில், அந்தக் கணக்குகள் முறையே பர்வீன் மற்றும் கவுரவ் பயன்படுத்தியது என்பதும், மேலும் அவர்கள் ஃபரிதாபாத், ஹரியானா பகுதியை சார்ந்த நபர்கள் என்பது கண்டறியப்பட்டது.அந்த நபர்களுடைய செல்போன் எண்கள் கண்காணிக்கப்பட்டு அவர்கள் எங்கே இருக்கிறார் என்பது தெரிய வரவே இணையவழி குற்றப்பிரிவு ஆய்வாளர் தியாகராஜன் உத்தரவின்பேரில் கீர்த்தி மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், உதவி துணை ஆய்வாளர் சுதாகர் மற்றும் தலைமை காவலர் அருண்குமார் அடங்கிய தனிப்படை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு டெல்லி சென்று சைபர் கிரைம் குழுவினர் பர்வீன் மற்றும் கவுரவ் ஆகிய இருவரையும் கைது செய்து இன்று காலை புதுச்சேரி சைபர் கிரைம் காவல்நிலயம் கொண்டுவந்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில் பார்வீன் என்பவர் 1 சிம் கார்டு 500 ரூபாய்க்கும் மற்றும் ஒரு வங்கி கணக்கு 5000 ரூபாய்க்கும் ஆக மொத்தம் பல்வேறு சிம் கார்டு மற்றும் 100 க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை கவ்ராவ் என்பவரிடம் பணத்திற்காக விற்றுள்ளார். கவுரவ் என்பவர் 2019 ஆம் ஆண்டில் நொய்டா மாநிலத்தில் வேலை வாய்ப்பு மோசடி செய்யும் கால் சென்டரில் 6 மாதம் வேலை செய்துள்ளார் . அதன் பிறகு கொரோனா காலத்தில், கவுரவ் மற்றும் சந்தீப் (கவுரவ் நண்பர்) ஆகிய இருவரும் பரிதாபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சொந்தமாகவே கால் சென்டரை ஆரம்பித்து, வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் கடந்த ஆண்டுகளில் பல கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது சம்பந்தமாக பல்வேறு மாநிலங்களில் புகார்கள் பதியப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் போலீசாரிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க அடிக்கடி தனது கால் சென்டர் இருப்பிடத்தை மாற்றி வந்துள்ளது தெரிய வந்துள்ளது. பின்னர், குற்றம் சாட்டப்பட்ட பர்வீன் மற்றும் கவ்ராவ் ஆகிய இருவரையும் புதுச்சேரி தலைமை நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் டெல்லி சென்று குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த ராதாகிருஷ்ணன் (உதவி ஆய்வாளர்), சுதாகர் (உதவி துணை ஆய்வாளர்) மற்றும் அருண்குமார் (தலைமை காவலர்) ஆகியோர்களை கொண்ட சைபர் குழுவினை நாரா சைதன்யா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளார்.இது தொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா பேசுகையில், “பதிவு செய்யப்படாத போலியன கால் சென்டர்களை கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போலி அப்ளிகேஷன் மூலம் மோசடி செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.தெரியாத நபர்களிடமிருந்து வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மூலம் ஏதேனும் அழைப்புகள் வந்தால் அதை முற்றிலும் நம்ப வேண்டாம். அத்தகைய விவரங்களுக்கு பதிலளிப்பதற்கு முன், தொலைபேசி அழைப்பு மூலமாகவோ அல்லது நேரில் மூலமாகவோ உரிய நபரிடம் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். போலியான உடனடி கடன் செயலிகளை நம்ப வேண்டாம். இதுபோன்ற உடனடி கடன் செயலிகளை நீங்கள் உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்தால், அவர்கள் உங்கள் செல்போனில் உள்ள போட்டோ மற்றும் தனிப்பட்ட தகவல்களைத் திருடி, அதனை மார்பிங் செய்து உங்கள் உறவினர்களின் தொலைபேசி எண்ணிற்கு மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை அனுப்பி உங்களை மிரட்டி பணம் பறிக்க தொடங்குவார்கள்.வாட்ஸ்அப் குழுக்கள், டெலிகிராம் குழுக்களிடமிருந்து வரும் ஆன்லைன் வர்த்தகம்(Trading , Cypto Currency, Bitcoin) தொடர்பான மெசேஜ் ஏதேனும் வந்தால், அதனை முற்றிலும் நம்ப வேண்டாம். சைபர் குற்றவாளிகள் போலியான வர்த்தக நிபுணராக ஆள்மாறாட்டம் செய்து உங்கள் பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சிப்பார்கள்.மும்பை காவல்துறை, CBI மற்றும் TRAI அதிகாரிகள் போன்ற அழைப்புகள் வந்தால், அதனை நம்ப வேண்டாம். சைபர் குற்றவாளிகள், மேற்கண்ட அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து, உங்கள் செல்போன் நம்பர் அல்லது உங்கள் வங்கிக் கணக்குகள் சைபர் குற்றம்/ஹவாலாவில் ஈடுபட்டுள்ளதாக கூறி உங்களை மிரட்டத் தொடங்குவார்கள், மேலும் விரைவில் அவர்கள் உங்களைக் கைது செய்து, கைது செய்யாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டுவார்கள்.ஆன்லைன் மோசடியில் சிக்குவதைத் தவிர்க்க சமூக ஊடகங்களில் வரும் போலியான தகவல்களை முற்றிலும் நம்ப வேண்டாம். மேலும், சைபர் குற்றம் தொடர்பான ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டாலும், ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்தாலும் உடனடியாக சைபர் குற்றத்திற்கான கட்டணமில்லா எண் 1930, இணையதளம்: cybercrime.gov.in, லேண்ட்லைன்: 04132276144/9489205246 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.” என்று அவர் கூறியுள்ளார். செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி.