
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 08/04/2025 | Edited on 08/04/2025

புதுமுக நடிகர் ரங்கராஜ் தயாரித்து, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கட்ஸ்’. இப்படத்தில் ரங்கராஜ், ஸ்ருதி நாராயணன், ஸ்ரீலேகா, டெல்லி கணேஷ், சாய் தீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜோஸ் பிராங்களின் இசையமைத்திருக்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவில் சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ரங்கராஜ், நடிகை ஸ்ருதி நாராயணன், ஜாக்குவார் தங்கம், கில்ட் செயலாளர் துரைசாமி, டைகர் சக்கரவர்த்தி, ஷிவானி செந்தில், சத்யபதி, இஸ்மாயில், ஸ்ரீலேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் டைகர் சக்ரவர்த்தி பேசுகையில் தயாரிப்பாளர் சங்கம், நடப்பு தயாரிப்பாளர் சங்கம், ஃபெப்சி அமைப்பு உள்ளிட்ட சங்கங்கள் குறித்து பேசினார். அப்போது ரஜினி, விஜய் படம் பண்ணினால் ரசிகர்களை விட சங்க உறுப்பினர்கள் தான் நீண்ட நாட்கள் தங்களுக்கு வேலை இருக்கும் என சந்தோஷப் படுவார்கள். விஜய் இப்போது சினிமாவை விட்டு விலகுகிறார். இதனால் சங்கத்தில் இருப்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதை தமிழக முதல்வர்களிடம் சங்கங்கள் எடுத்து கொண்டு சரி செய்ய வேண்டும் என்றார். மேலும் முதியவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும். இளைஞர்கள் வெளியே வராமல் இருப்பதற்கு காரணம் கார்ப்ப்ரேட். அதனால் முதியவர்கள் விலகிக் கொள்ளுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து ஜேகுவார் தங்கம் பேசுகையில், “யாரும் இங்கு சங்கம் குறித்து பேசக்கூடாது. ரஜினி உள்ளிட்ட முதியவர்களைப் பற்றி பேசுவதற்கு தகுதி வேண்டும். திருடாதவன் முதியோர். திருடுகிறவன் சின்னவரா” என பேசினார். தொடர்ந்து அவர் பேசிக்கொண்டிருந்த போது கீழேயிருந்த ஒருவர் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க உடனே கோபப்பட்ட ஜேகுவார் தங்கம், எதிர்ப்பு தெரிவித்தவரை திருடன் என குற்றம் சுமத்தி கடுமையாகச் சாடினார். பின்பு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஒருவருக்கொருவர் கடுமையாக மாறி மாறி திட்டிக் கொண்டனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தினர். இதனால் பட விழாவில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.