வணிகம்
பி.எஃப் கணக்கை செயல்படுத்த முக அங்கீகார தொழில்நுட்பம்; புதிய நடைமுறை அறிமுகம்

பி.எஃப் கணக்கை செயல்படுத்த முக அங்கீகார தொழில்நுட்பம்; புதிய நடைமுறை அறிமுகம்
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சந்தாதாரர்கள் இப்போது முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி UAN கணக்கை உருவாக்கி செயல்படுத்த முடியும். இ.பி.எஃப் தரவுத்தளத்தில் சந்தாதாரரின் மொபைல் எண் உள்ளிட்ட தகவல்களில் பிழை ஏற்படுவதாக கூறப்படும் நிலையில், இதனை சீரமைக்கும் இப்புதிய திட்டத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் படிக்கவும்: EPFO subscribers can now use face authentication to activate UAN: Here’s how “பணியாளர் மற்றும் அவர் பணியாற்றும் நிறுவனம் என இரு தரப்பினரும் முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி UAN-ஐ உருவாக்கிக் கொள்ள முடியும். டிஜி யாத்ரா செயலியில் பயன்படுத்தப்படும் அதே முறையை இதில் கையாளலாம். ஒரு நபர் பதிவேற்றும் புகைப்படம், ஆதார் தரவுதளத்துடன் பொருத்திப் பார்க்கப்பட்டதும், எஸ்.எம்.எஸ் வாயிலாக UAN-ஐ பெற்றுக் கொள்ளலாம்” என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.கடந்த பதினைந்து நாட்களில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அறிவித்த மற்றொரு பெரிய எளிமைப்படுத்தல் நடவடிக்கை இதுவாகும். கடந்த வாரம், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இரண்டு முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. அவை, காசோலை அல்லது சான்றளிக்கப்பட்ட வங்கி பாஸ்புக் படத்தை பதிவேற்றுவதற்கான தேவையை நீக்குதல் மற்றும் UAN உடன் வங்கி கணக்கு விவரங்களை சேர்ப்பதற்கு பணியாற்றும் நிறுவன ஒப்புதலின் தேவையை நீக்குதல் ஆகும்.ஆதார் அடிப்படையிலான முக அங்கீகாரத்தை எவ்வாறு செயல்படுத்துவது?முக அங்கீகார தொழில்நுட்ப நடவடிக்கையின் கீழ், ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, அதன் சந்தாதாரர்களுக்கு UAN ஒதுக்கீடு மற்றும் செயல்படுத்துவதற்கான சேவையை வழங்கும். இது கோடிக்கணக்கான உறுப்பினர்களுக்கு தொடர்பு இல்லாத, பாதுகாப்பான மற்றும் முழுமையான டிஜிட்டல் சேவையை வழங்குவதற்கான முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் UMANG செயலியை பயன்படுத்தி, ஆதார் – இணைக்கப்பட்ட முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஊழியர்கள் நேரடியாக UAN-ஐ உருவாக்க முடியும். எந்தவொரு புதிய ஊழியர்களுக்கும் முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி UAN-ஐ உருவாக்க, சம்பந்தப்பட்ட நிறுவனமும் அதே UMANG செயலியை பயன்படுத்தலாம். ஏற்கனவே UAN-ஐ கொண்டுள்ள, ஆனால் இன்னும் அதைச் செயல்படுத்தாத உறுப்பினர்களும் UMANG செயலியை உபயோகித்து, UAN-ஐ செயல்படுத்தலாம்.”OTP-அடிப்படையிலான அங்கீகாரம் போன்ற பாரம்பரிய முறைகளுடன் ஒப்பிடும்போது முக அங்கீகார தொழில்நுட்பட்பம் அதிக அளவிலான பாதுகாப்பை வழங்குகிறது. இது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தளத்தில் நுழையும் போது துல்லியமான சரிபார்ப்பை உறுதி செய்கிறது” என்று அமைச்சகம் கூறியது.தற்போதைய செயல்முறை என்ன?தற்போதைய நிலவரப்படி, UAN-ஐ உருவாக்க ஊழியர்களின் விவரங்கள், அந்நிறுவனத்தின் வாயிலாக சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்த தகவல்கள் சரிபார்க்கப்பட்டாலும் கூட, தந்தை பெயர் மற்றும் செல்போன் எண்கள் போன்றவற்றில் சில நேரங்களில் தவறு நடைபெறுகிறது. குறிப்பாக, பல நேரங்களில் பயனாளிகளின் செல்போன் எண்கள் தவறாக அல்லது குறிப்பிடப்படாமல் இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், அவர்களை தொடர்பு கொள்ள ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் முடியவில்லை.ஊழியர்களின் UAN-ஐ ஆதார் OTP-ஐ பயன்படுத்தி செயல்படுத்துமாறு, நிறுவனங்களுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நினைவூட்டுகிறது. இந்த முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது, இது போன்ற சிக்கல்களை தவிர்க்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024 – 25 நிதியாண்டில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 1.27 கோடி UAN-களை ஒதுக்கியுள்ளது. எனினும், இவற்றில் 44,68,236 UAN-கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளன.