வணிகம்
ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு; வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு – ஆர்.பி.ஐ. அறிவிப்பு

ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு; வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு – ஆர்.பி.ஐ. அறிவிப்பு
மும்பையில் இந்திய ரிசர்வ் வங்கி 2025-26 ஆம் நிதியாண்டுக்கான இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) 6 உறுப்பினர்களைக் கொண்ட கொள்கைக் குழு (MPC) கூட்டம் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் நாணயக் கொள்கை முக்கிய முடிவை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்தார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்ரிசர்வ் வங்கி, நிதியாண்டு 2026-க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை முந்தைய மதிப்பீட்டான 6.7 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாகக் குறைத்துள்ளது. 2025-26 ஆம் ஆண்டில் சில்லறை பணவீக்கம் 4 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா மீது விதித்துள்ள 104% வரிவிதிப்பு ஆகியவை உலக வர்த்தகத்தில் பொருளாதார நிச்சமற்றத் தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கினார். இந்தியாவில் பணவீக்கம் குறைந்து பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதால், ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான நாணய கொள்கை ஆணையம், ரெப்போ விகிதத்தைக் குறைப்பதாகத் தெரிவித்திருக்கிறது.பணவீக்கம் குறைந்ததைத் தொடர்ந்து வட்டி விகிதம் குறைப்பு:பணவீக்கம் குறைந்ததைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் நாணயவியல் கொள்கைக் குழு, தொடர்ந்து 2-வது முறையாக ரெப்போ விகிதத்தில் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைப்பை அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கடைசி கொள்கை கூட்டத்தில், 5 ஆண்டுகளுக்குப் பின்னர் ரெப்போ விகிதத்தை 6.5 சதவிகிதத்திலிருந்து 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்திருந்தனர். மேலும், 2 மாத இடைவெளியில் மீண்டும் 0.25 சதவிகிதம் குறைப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகளின் குறுகிய கால நிதித்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ரிசர்வ் வங்கி அவர்களுக்குக் கடன் கொடுக்கும் விகிதமாகும். ஜனவரி-பிப்ரவரி மாத பணவீக்கம் சராசரியாக 3.9 சதவீதமாக உள்ளது. இது ஜனவரி-மார்ச் 2025க்கான ரிசர்வ் வங்கியின் காலாண்டு கணிப்பை விடக் குறைவு. 2025 நிதியாண்டின் 4-வது காலாண்டில் நுகர்வோர் விலை அடிப்படையிலான பணவீக்கம் (CPI) 4.8 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.பயன் பெறப் போவது யார்?பிப்ரவரி மாதக் கொள்கையின் போது ரெப்போ விகிதத்தில் 25 புள்ளிகள் குறைக்கப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக, வங்கிகள் தங்கள் ரெப்போ-இணைக்கப்பட்ட கடன் விகிதங்களை இதே அளவு குறைத்துள்ளன. ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், மாதந்தோறும் கடன் செலுத்துபவர்களுக்கான வீடு, கார், தனிநபர் ஆகியவற்றின் கடன் இ.எம்.ஐ (அ) ஒரு குறிப்பிட்ட தொகை குறைய வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.