இந்தியா
“ஆர்.எம்.வி.தி கிங் மேக்கர்” ஆவணப் பட முன்னோட்டக் காட்சி வெளியீடு; நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட நடிகர் ரஜினி!

“ஆர்.எம்.வி.தி கிங் மேக்கர்” ஆவணப் பட முன்னோட்டக் காட்சி வெளியீடு; நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட நடிகர் ரஜினி!
மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவு நாளான நேற்று, ஆர்.எம்.வி.தி கிங் மேக்கர் என்ற ஆவணப் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த முன்னோட்டக் காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் ஆர்.எம்.வீரப்பன் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது பற்றி நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
குறித்த விளக்கத்தில் அவர் தெரிவித்ததாவது;
பாட்ஷா விழாவில், ஆர்.எம்.வீரப்பன் தயாரிப்பாளராக மேடையில் இருந்தார். வெடி குண்டு கலாசாரத்தை பற்றி நான் பேசினேன். அமைச்சரை வைத்துக்கொண்டே அதை பற்றி பேசி இருக்கக்கூடாது. ஆனால் பேசி விட்டேன். அப்போது எனக்கு அந்தளவுக்கு தெளிவு இல்லை. அப்போது அவர் அ.தி.மு.கவில் அமைச்சராக இருந்தார். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவரை பதவியில் இருந்து தூக்கிவிட்டார். அது தெரிந்ததும் நான் ஆடிபோய் விட்டேன். என்னால் தானே இப்படி ஆகிபோனது என்று எனக்கு இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை.
காலையில் தொலைபேசியின் மூலம் அழைப்பினை ஏற்படுத்தி மன்னிப்பு கேட்டேன், ஆனால் அவர் எதுவுமே நடக்காததுபோல், அதைப்பற்றியெல்லாம் யோசிக்காதீர்கள், பதவிதானே போனது, நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள் என்று சர்வ சாதாரணமாக சொன்னார். ஆனால், அது தழும்பு போல என்னைவிட்டு போகவில்லை…போகாது.
ஜெயலலிதாவுக்கு எதிராக நான் குரல் கொடுத்ததற்கு சில காரணங்கள் இருந்தால்கூட, இந்த காரணம் முக்கியமானது. இதுகுறித்து ஜெயலலிதாவிடம் நான் பேசுவதாக ஆர்.எம்.வி.யிடம் கூறினேன். ஆனால், ஜெயலலிதா ஒரு முடிவெடுத்தால் மாற்ற மாட்டார், அவரிடம் பேசி உங்கள் மரியாதையை நீங்கள் இழக்க வேண்டாம். அப்படி சொல்லி அங்கு சேர வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துவிட்டார் என்றார் நடிகர் ரஜினிகாந்த்.