இலங்கை
பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படாவிடின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிவிலக்கு இலங்கைக்கு மறுக்கப்படும்

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படாவிடின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிவிலக்கு இலங்கைக்கு மறுக்கப்படும்
ஐரோப்பிய ஒன்றியம் திட்டவட்டம்
ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைகள் இலங்கைக்குத் தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும் என்றால், பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரினோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
‘ஜி.எஸ்.பி. பிளஸ்’ வரிச்சலுகையை இலங்கையே ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேட்கிறது. எனவே, அந்தச் சலுகையைக் கேட்டால் அதற்கேற்றவாறு இலங்கை நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு நடந்துகொள்ளாமல் விட்டுவிட்டு, எங்களது நிபந்தனைகளைத் தளர்த்துமாறு எம்மிடமே இலங்கை கோரமுடியாது. அத்துடன், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கியிருக்கின்ற சலுகையை இலங்கை முழுமையாகப் பயன்படுத்தவில்லை. அதனை முழுமையாகப் பயன்படுத்தினால் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதியை இரண்டு மடங்காக அதிகரிக்க முடியும்.
எனினும், அரசாங்கம் உரையாடலைத் தொடங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இன்னும் எதையும் செய்யவில்லை என்றால், ஏன்? என்ன தடைகள் உள்ளன? என்பதையாவது கூறவேண்டும். அனைத்து விடயங்களும் இன்றைய தினத்திலேயே (உடனுக்குடன்) தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. ஆனால், கலந்துரையாடல்கள் அவசியம். தெளிவூட்டல்கள் தேவைப்படுகின்றன.
முக்கியமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். ஆனால், அரசாங்கம் அதனை நீக்கவில்லை. அந்த சட்டம் இன்னும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பதிலாக கடந்த அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட புதிய சட்டமும் மிக மோசமானதாக இருக்கிறது. எந்தச் சட்டமும் சர்வதேச சட்டங்களையும், மரபுகளையும் பின்பற்றுவதாக அமைய வேண்டும் -என்றார்.