இலங்கை
ஹோட்டல் உரிமையாளரை கடத்திச் சென்று கப்பம் பெற்ற பொலிஸார்!

ஹோட்டல் உரிமையாளரை கடத்திச் சென்று கப்பம் பெற்ற பொலிஸார்!
அநுராதபுரம் மிஹிந்தலை பகுதியிலுள்ள ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை கடத்திச் சென்று 45 இலட்சம் ரூபா பணத்தினை கப்பமாக பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் மற்றும் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவைச் சேர்ந்த சிப்பாய் உட்பட 5 சந்தேக நபர்கள் மிஹிந்தலை பொலிஸாரால் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 06 ஆம் திகதி இடம்பெற்ற இச்சமபவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மிஹிந்தலை நகரிலுள்ள ஹோட்டல் உரிமையாளரான ஓய்வு பெற்ற கடற்படை உத்தியோகத்தரினால் 07 ஆம் திகதி மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு சிப்பாய் உட்பட ஐந்து பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலன்னறுவை பகுதியை வசிப்பிடமாக கொண்ட 30 வயதிற்கும் 48 வயதிற்கும் இடைப்பட்ட வர்கள் ஆவார்.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் நீதிமன்றத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மிஹிந்தலை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.