விளையாட்டு
தேசிய அளவிலான மலைப்பகுதி டவுன்ஹில் சைக்கிள் போட்டி: சாதனை படைத்த கோவை மாணவி; தமிழக அரசுக்கு கோரிக்கை

தேசிய அளவிலான மலைப்பகுதி டவுன்ஹில் சைக்கிள் போட்டி: சாதனை படைத்த கோவை மாணவி; தமிழக அரசுக்கு கோரிக்கை
ஹரியானாவில் நடைபெற்ற தேசிய அளவிலான மலைப்பகுதி (டவுன்ஹில்) சைக்கிள் போட்டியில் கோவையை சேர்ந்த மாணவி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அண்மையில் ஹரியானா மோர்னி மலையில் 21-வது தேசிய அளவிலான டவுன்ஹில் சைக்கிள் போட்டி நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில், தென்னிந்தியா சார்பாக கோவையை சேர்ந்த திலோத்தமா என்ற கல்லூரி மாணவி கலந்து கொண்டார். கரடு முரடான மலைப்பாதையில் இரண்டு கிலோமீட்டர் தூரத்தை ஐந்து நிமிடம் 45 வினாடிகளில் கடந்த அவர் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். இதற்காக கடந்த ஒரு வருடமாக பயிற்சி மேற்கொண்டுள்ளதாகவும், இந்த போட்டியில் பங்கேற்று தங்க பதக்கத்தை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் மாணவி திலோத்தமா தெரிவித்தார். தொடர்ந்து உலக அளவில் நடைபெறும் மலைப்பாதை சைக்கிள் போட்டியில் பங்கேற்க விரும்புவதாக தெரிவித்த மாணவி திலோத்தமா, இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் இந்த போட்டியில் பங்கேற்க தனக்கு அரசு மற்றும் தனியார் சார்பில் உதவி தேவைப்படுவதாகவும் கூறினார். செய்தி பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்.