இலங்கை
புதிய அரசியலமைப்பு உருவாகுவது நிச்சயம்

புதிய அரசியலமைப்பு உருவாகுவது நிச்சயம்
வடக்கு, கிழக்கு அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு; நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் உறுதி
நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய புதிய அரசியலமைப்பு நிச்சயம் உருவாக்கப்படும். தேசிய நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு மேம்பாட்டுக்கான சிறந்த செயற்பாட்டுத் திட்டங்கள் இந்த ஆண்டு இறுதிப்பகுதியில் செயற்படுத்தப்படும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்போம்.
இவ்வாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
அரசியல் தேவைகளுக்காக அரசியலமைப்பை உருவாக்குவதாயின் அந்தப்பணிகளை ஒரு மாத காலத்துக்குள் ஆரம்பித்து நிறைவு செய்யலாம். கடந்தகாலங்களில் அவ்வாறான செயற்பாடுகளே காணப்பட்டன. ஆட்சிக்கு வரும் அரசாங்கம் தங்கள் தேவைக்காக அரசியலமைப்பைத் திருத்தம் செய்தது. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் அதற்குச் சிறந்த உதாரணம்.
1978ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாம் குடியரசு யாப்பு இதுவரை 21 திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் அனுமதியுடனும், அபிலாசையுடனும் அவற்றில் ஒரு திருத்தமேனும் மேற்கொள்ளப்படவில்லை. அதனாலேயே அரச நிர்வாகக் கட்டமைப்புப் பலவீனமடைந்தது. அரசியலமைப்பு மீதான மக்களின் நம்பிக்கையும் சிதைந்தது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த பணிகளைத் தொடர்வோம் என்று நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தோம். அந்த வாக்குறுதியில் எந்த மாற்றமும் இல்லை. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான பணிகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்று ஒரு தரப்பினர் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளுக்குத் தற்போது முன்னுரிமை வழங்க வேண்டியிருக்கின்றது. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள், சட்டவாட்சி என்பவற்றைச் செயற்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டவகையில் தீர்க்கப்படவேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன. இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதி வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுகின்றார். பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த வழக்குகள் தற்போது மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொடுப்போம் – என்றார்.