இலங்கை
இலங்கையில் மீண்டும் மருத்துவ நெருக்கடி!

இலங்கையில் மீண்டும் மருத்துவ நெருக்கடி!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் எச்சரிக்கை
இலங்கையில் மீண்டும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடிய நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. இந்த நெருக்கடிகளைச் சீர்செய்வதற்கு அரசாங்கத்திடம் எந்தத் திட்டங்களும் இல்லை – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு நீர்கொழும்பில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரையின்போதே சஜித் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
இன்று மருத்துவமனைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சுகாதாரம் என்பது சேவையல்ல, அது மனித உரிமையும், அடிப்படை உரிமையுமாகும். இலவச மருத்துவம் என்ற மக்களின் மனித உரிமையைக் கூட அரசாங்கத்தால் வழங்க முடியவில்லை. அரச மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லை. இலவச மருத்துவ சேவை காணப்படும் மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லாமையால் உயிர்காக்கும் மருந்துகளை கூட தனியார் மருந்தகங்களில் வாங்கும் நிலைக்கு நாடு வந்துள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் பதில் இல்லை.
வருமான மூலங்கள் வீழ்ச்சியடைந்து, வாழ்வாதாரங்கள் வீழ்ச்சியடைந்து, வருமானம் கூட குறைந்துள்ள இவ்வேளையில், பொருள்களின் விலைகளும், வாழ்க்கைச் செலவுகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் தமது பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கக்கூட முடியாத நிலை உருவாகி வருகிறது.
காற்று, சூரிய ஒளி மற்றும் நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் விலை குறைவாக இருந்தாலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மாறாக, டீசல் மற்றும் அனல் மின்சாரம் பயன்பெறும் திட்டத்தையே தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளது. சதிகாரர்களால் மின்சாரத்துறை கையகப்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரத்தை அதிக விலைக்கு பாவனையாளர்களுக்கு வழங்கும் மாபியாக்களிடம் மின்சாரத்துறை கையளிக்கப்பட்டுள்ளது. அந்த சதியை முறியடிக்கும் இயலுமை இந்த அரசாங்கத்திடம் இல்லை. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை வழங்குவோம் என மேடைக்கு மேடை கூறிவந்த ஜனாதிபதி அநுர, தற்போது மின்சார மாபியாக்களின் சொற்படி நடக்க ஆரம்பித்துள்ளார் – என்றார்.