இலங்கை
தற்போதைய அரசிலும் நம்பிக்கை இழந்தோம்!

தற்போதைய அரசிலும் நம்பிக்கை இழந்தோம்!
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நேற்றுப் போர்
ஜனாதிபதி அநுர மீதும், தற்போதைய அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை இழந்துள்ளோம் என்று காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறும், தமக்கு நீதி வேண்டும் என்றும் வலியுறுத்தி, கிளிநொச்சி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் நேற்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே, கடந்த அரசாங்கங்களைப் போல தற்போதைய அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கையற்ற நிலையில் தாம் உள்ளதாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:
ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பெடுத்து ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. எனினும், எங்களின் கோரிக்கைகளுக்கு காத்திரமான பதிலொன்று வழங்கப்படவில்லை.
உள்ளக விசாரணையூடாக வழங்கப்படும் பதில்களும், தீர்வுகளும் போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்றும் விதமாகவே அமையும். ஆதலால்தான் நாங்கள் சர்வதேச விசாரணையைக் கோருகின்றோம். எனவே, எமது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்குவந்த அரசாங்கம், எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் – என்றனர்.