இலங்கை
ஆசிய மெய்வல்லுநர் ஓட்டப் போட்டியில் பறிப்போன பதக்கம் ; அதிகாரிகளின் அசமந்தப்போக்கினால் வாய்ப்பை இழந்த சிறுமிகள்

ஆசிய மெய்வல்லுநர் ஓட்டப் போட்டியில் பறிப்போன பதக்கம் ; அதிகாரிகளின் அசமந்தப்போக்கினால் வாய்ப்பை இழந்த சிறுமிகள்
சவூதி அரேபியாவின் தமாம் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 6ஆவது 18 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் அதிகாரிகளின் அசமந்தப்போக்கினால் இலங்கை வீராங்கனைகள் இருவருக்கு பங்குபற்ற முடியாமல் போனது.
இதன் காரணமான அப் போட்டியில் இலங்கைக்கு கிடைக்கவிருந்த 2 பதக்கங்கள் துரதிர்ஷ்டவசமாக அற்றுப்போயுள்ளது.
இந்தப் போட்டியில் பதக்கங்களை வென்றெடுக்கக் கூடியவர்கள் என பெரிதும் நம்பப்பட்ட நிதுக்கி ப்ரார்த்தனா, அயேஷா செவ்வந்தி ஆகிய இருவருக்கும் அப் போட்டியில் பங்குபற்ற முடியாத நிலை உருவானது.
அதிகாரிகளின் கவனக்குறைவும் அசமந்தப்போக்குமே இதற்கு காரணம் என தெரிவித்து, நியாயம் கோரி இலங்கை அணியின் முகாமையாளர் ஆட்பேனை மனு ஒன்றை மேன்முறையீட்டு குழுவினரிடம் சமர்ப்பித்துள்ளார்.
ஆனால், அந்த மனுவை மேன்முறையீட்டுக் குழுவினர் நிராகரித்து போட்டி முடிவு சரியானது என அறிவித்ததாக ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
நிதுக்கி ப்ரார்த்தனா (சிறந்த நேரப் பெறுதி 4:41.89), அயேஷா செவ்வந்தி (சிறந்த நேரப் பெறுதி 4:43.41) ஆகிய இருவரும் அதிசிறந்த நேரப் பெறுதிகளைக் கொண்டிருந்தபோதிலும் அப் போட்டியில் பங்குபற்றாததால் இலங்கைக்கு கிடைக்கவிருந்த பதக்கங்கள் அற்றுப்போனது.
18 வயதுக்குட்பட்ட ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றி முதல் நான்கு இடங்களைப் பெற்ற ஸங் யாக்சி (சீனா 4:58.35 – தங்கம்), சாமா முஸ்தபா (லெபனான் 4:58.82 – வெள்ளி), மர்ஜோனா சய்துல்லாவா (உஸ்பெகிஸ்தான் 4:59.85 – வெண்கலம்), ஸீக் அஷ்ரப் ராஷீத் (மாலைதீவுகள் 5:26.66 – நான்காம் இடம்) ஆகியோரைவிட அதிசிறந்த நேரப் பெறுதிகளை நிதுக்கியும் அயேஷாவும் கொண்டிருந்தனர்.