இலங்கை
ரணில் காலத்தில் விடுவிக்கப்பட்டதாக அறிவித்த காணிகள் படையினரின் வசமே!

ரணில் காலத்தில் விடுவிக்கப்பட்டதாக அறிவித்த காணிகள் படையினரின் வசமே!
தற்காலிக கொட்டகைகள் அமைப்பதற்குத் தடை மாலை நேரத்துக்கு முன்னரே விரட்டப்படும் மக்கள்
போக்குவரத்துக்காகத் தொடரும் அலைச்சல்
யாழ்ப்பாணம் – வலி.வடக்கில் கடந்த வருடம் மார்ச் மாதம் விவசாய நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட காணிகள், தொடர்ந்தும் படையினரின் இறுக்கமான கட்டுப்பாட்டின் கீழேயே காணப்படுவதாகவும், பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பொதுமக்களுக்கு காணி உரிமம் வழங்கும் ‘உறுமய’ வேலைத்திட்டம் யாழ்ப்பாணம் – ஒட்டகப்புலம் பகுதியில் கடந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்றது. இந்தத் திட்டத்தின் கீழ், 408 பேருக்கு 235 ஏக்கர் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
பலாலி வடக்கு ஜே/254, பலாலி கிழக்கு ஜே/253, பலாலி தெற்கு ஜே/252, வயாவிளான் கிழக்கு ஜே/244, வயாவிளான் மேற்கு ஜே/245 ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தொடர்புடைய காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்றும் இராணுவத்தினரின் பாதுகாப்பு நெருக்கடிகள் மிகவும் அதிகரித்துள்ளன என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்தக் காணிகள் மக்களால் முற்றுமுழுதாகப் பயன்படுத்த வேண்டுமாயின், இராணுவ முகாமின் எல்லையை நகர்த்த வேண்டியிருந்தது. இதற்காக அண்ணளவாக 18 மில்லியன் ரூபா தேவை என்று இராணுவத்தால் மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், அந்தத் தொகை வழங்கப்படாமையால் இராணுவ முகாமின் எல்லை அதே இடத்திலேயே தொடர்ந்தும் நிலைபெற்றுள்ளது.
இராணுவத்தின் பாதுகாப்பு வேலிகள் நகர்த்தப்படாத காரணத்தால், பொதுமக்கள் பிரதான வீதிக்குப் போக்குவரத்துச் செய்வதற்கு பெருமளவுதூரம் சுற்றிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், மாலை நேரத்துக்கு முன்னரே பொதுமக்கள் தமது நிலப்பகுதிகளை விட்டு வெளியேற்றப்படுவதாகவும், விவசாய நிலங்களில் தமது பாதுகாப்புக்காக தற்காலிகக் கொட்டகைகளைக்கூட அமைக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
‘காணிகள் விவசாய நடவடிக்கைக்காகவே விடுவிக்கப்படுகின்றன. பொதுமக்களுக்கு ஒத்தாசையாக இராணுவத்தினரும் செயற்படுவார்கள்’ என்ற அறிவுறுத்தலுக்கு அமையவே காணிகள் விடுவிக்கப்பட்டன. ஆதலால், இந்தக் காணி விடுவிப்பு, ஒரு முழுமையான நடவடிக்கை அல்ல என்று அன்றையதினமே பல தரப்பினரும் சுட்டிக்காட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.